முழுமையாக குளிர்சாதன வசதி யுடைய புதிய உட்லண்ட்ஸ் பேருந்து முனையம் வரும் ஜூன் 13ம் தேதி திறக்கப்படும். சிங்கப்பூரின் ஆகப் பெரிய ஒருங்கிணைந்த போக்குவரத்து மையமாக அது இருக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்தது.
பேருந்து முனையங்கள், எம்ஆர்டி ரயில் நிலையங்கள், அருகில் உள்ள கடைத்தொகுதிகள் ஆகியவற்றை இணைத்துக் கட்டப்படும் 11வது ஒருங்கிணைந்த போக்கு வரத்து முனையத்தை எஸ்எம்ஆர்டி நிறுவனம் நிர்வகிக்கும்.
புதிய உட்லண்ட்ஸ் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தின் பரப்பளவு சுமார் 41,500 சதுர மீட்டர். 2002ல் முதன்முதலாக தோ பாயோவில் திறக்கப்பட்ட முதலாவது ஒருங்கிணைந்த போக்கு வரத்து மையத்தைவிட அது கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு பெரிதாகும்.
உட்லண்ட்ஸ் வட்டாரம் தற்போது வடக்கு தெற்கு ரயில் பாதை, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை இரண்டையும் பெற்றுள்ளது. ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் செயல்படத் தொடங்கும்போது, அந்த வட்டாரம் ஒரு முக்கியமான போக்குவரத்து மையமாக மாறும். பயணிகள் ரயில்களுக்கும் பேருந்து களுக்கும் மாறுவதும் எளிதாகும்.
சக்கர நாற்காலிகளில் உள்ள பயணிகள் எளிதாக பேருந்தில் ஏறுவதற்கான வசதிகள் புதிய முனையத்தில் இருக்கும்.
அத்துடன், போக்குவரத்து ஊழியர்களுக்கு ஏதுவாக, அவர்களுக்கான சிற்றுண்டிச் சாலையில் குளிர்வசதி இருக்கும். அத்துடன், ஊழியர்கள் இளைப்பாறுவதற்கான அறை, துப்புரவுப் பணியாளர்களுக்கான அறை உள்ளிட்ட வசதிகளை புதிய முனையம் கொண்டிருக்கும் என்றது நிலப் போக்குவரத்து ஆணையம்.
2016லிருந்து உட்லண்ட்சில் செயல்பட்டு வரும் தற்காலிக பேருந்து முனையக் கட்டடம், இப்போதைக்கு தொடர்ந்து செயல்படும். போக்குவரத்து நெரிசல் ஏதும் ஏற்பட்டால், புதிய ஒருங்கிணைந்த மையத்துக்குப் அருகில் இருக்கும் தற்காலிக முனையத்தைப் பயன்படுத்தவே அந்த ஏற்பாடு.
தற்காலிக முனையத்தில் 925/925M, 950, 961/961M, 965 ஆகியவையும் புதிய முனையத்தில் 25 சேவைகளும் இயங்கும்.

