சமய தலைவர்கள்: கொவிட்-19 சூழலில் ஒற்றுமை காப்போம்
கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழலில், ஒற்றுமை காக்கும்படி சிங்கப்பூரர்களை இங்குள்ள ஆறு சமய அமைப்புகளின் தலைவர்கள் ஒன்றுசேர்ந்து கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஜாமியா சிங்கப்பூர் அமைப்பின் தலைவர் முகமது ஹாஸ்பி அபு பக்கர் இன்று விடுத்த அறிக்கைக்கு, இந்து அறக்கட்டளை வாரியம், இந்து ஆலோசனை மன்றம், சிங்கப்பூர் ரோமன் கத்தோலிக்க பேராயம், சிங்கப்பூர் புதிஸ்ட் லாட்ஜ், தாவோ சம்மேளனம் ஆகியவை இணைந்து ஆதரவு தெரிவித்தன.
சமயத் தலைவர்கள் எனும் முறையில், கிருமிதான் நமது பொது எதிரி என்றும் மக்களோ, நாடுகளோ அவர்களது சமயங்களோ இல்லை என்றும் தங்கள் சமயங்களைப் பின்பற்று வோருக்கு நினைவூட்டுவதாக அமைப்புகள் கூறின.
வசதி குறைந்தவர்களுக்கும் உடல் குறைபாடு உள்ளவர்களுக்குமான சேவைகளைத் தொடரப் போவதாகவும் வெளிநாட்டு ஊழியர்கள், அவர்களின் குடும்பங்கள் உட்பட, சிங்கப்பூர் மக்கள்தொகை இடையே இன, சமய அமைதியையும் ஒற்றுமையையும் கட்டிக்காக்க உறுதி பூண்டிருப்பதாகவும் அமைப்புகள் தெரிவித்தன.
நெருக்கடி காலங்களின்போது, மக்கள் ஒன்றிணைந்திருப்பது அவசியம் என்பதால் இந்து அறக்கட்டளை வாரியம் அந்த அறிக்கைக்கு ஆதரவு நல்கியது என்றார் அதன் தலைமை நிர்வாக அதிகாரி திரு த. ராஜசேகர்.
எல்லைக் கட்டுப்பாடுகளால் மீண்டும்
பணிப்பெண் பற்றாக்குறை
இந்த மாதம் அறிவிக்கப்பட்ட புதிய எல்லைக் கட்டுப்பாடு களால், பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளி களுக்கும் முகவைகளுக்கும் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்று அபாயம் அதிகம் உள்ள நாடுகளில் இருந்து புதிதாக யாரும் வேலை அனுமதி பெற்று இங்கு வர அனுமதி வழங்கப்படாது என்று மனிதவள அமைச்சு இம்மாதம் 7ம் தேதி அறிவித்தது. முன்னதாகவே அனுமதி பெற்று, இந்த மாதம் வரவேண்டியவர்களின் பயணத் தேதிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
அடுத்து இனி எப்போது புதிதாக அனுமதி வழங்கப்படும் என்று தெரியாத நிலையில், பல முகவைகளுக்கு நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது என்றார் சிங்கப்பூர் வேலைவாய்ப்பு முகவைகள் சங்கத்தின் தலைவர் திருவாட்டி ஜெயப்பிரேமா.
புதிய பணிப்பெண்கள் இல்லை என்பதால் நிறுவனங்கள் அவற்றின் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. ஏற்கெனவே தமது சங்கத்தில் உள்ள சுமார் 300 முகவைகளில் 10 விழுக்காட்டு முகவைகள் மூடிவிட்டதாக அவர் கூறினார்.
ஃபாண்டி அகமதின் மூன்றாவது மகன் தேசிய குழுவில் விளையாட அழைப்பு
சிங்கப்பூரின் காற்பந்துப் பிரபலமான ஃபாண்டி அகமதின் இரண்டு மகன்களான இர்ஃபான், இஹ்சான் ஆகியோர் தற்போது தேசிய காற்பந்துக் குழுவில் விளையாடி வருகிறார்கள்.
இப்போது அவரது மூன்றாவது மகனான 18 வயது இல்ஹானுக்கும் (படம்) தேசிய காற்பந்துக் குழுவில் முதல் முறையாக விளையாட அழைப்பு வந்துள்ளது.
அடுத்த மாதம் சவூதி அரேபியாவில் நடைபெறும் 2022 உலகக் கிண்ணத் தகுதிச் சுற்று ஆட்டங்களில் விளையாட சிங்கப்பூர் தேசிய காற்பந்துக் குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் தட்சுமா யோஷிடா இல்ஹானுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இல்ஹான் தற்போது யங் லயன்ஸ் குழுவுக்கு விளையாடி வருகிறார்.
டி பிரிவில் பாலஸ்தீனம் (ஜூன் 3), உஸ்பெகிஸ்தான் (ஜூன் 7), சவூதி அரேபியா (ஜூன் 11) ஆகிய நாடுகளை சிங்கப்பூர் சந்திக்கும். சிங்கப்பூர் சவூதி அரேபியாவுக்கு செல்வதற்கு முன் துபாயில் இம்மாதம் 29ஆம் தேதியன்று ஆப்கானிஸ்தானுடன் ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடும்.
மதரஸா, இஸ்லாமிய கல்வி வகுப்புகள் நாளை முதல் இணையத்தில் நடத்தப்படும்
மதரஸா இஸ்லாமியப் பள்ளிகள், பள்ளிவாசல்களில் இடம்பெறும் இஸ்லாமிய பண்புநெறி வகுப்புகள், இஸ்லாமிய கல்வி நிலைய வகுப்புகள் ஆகியவை நாளை முதல் இணையத்தில் நடத்தப்படும் என்று முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், பிள்ளை பராமரிப்புக்குத் தகுந்த ஏற்பாடு செய்ய முடியாத பெற்றோர்களுக்காக குறைந்த அளவிலான மாணவர்களுக்கு மதரஸாவில் பாடங்கள் நடத்தப்படும் என்றும் முயிஸ் கூறியது.
அத்தியாவசிய சேவை தொடர்பான வேலைகளைச் செய்யும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை கூறியது.
"வீட்டிலிருந்து கற்பதற்குத் தேவைப்படும் கற்றல் பொருட்களைப் பெறுவது தொடர்பான தகவல்களை மதரஸாக்கள் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் தெரிவிக்கும். கற்றலுக்குத் தேவைப்படும் மின்னிலக்கக் கருவிகள் இல்லாத மாணவர்களுக்கு உதவி வழங்கப்படும்." என்றும் முயிஸ் தெரிவித்தது.
கொவிட்-19 தொடர்பான கடடுமையான கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கும் இக்காலத்தில் இஸ்லாமிய கல்வி நிலைய வகுப்புகளை நடத்தும் அமைப்புகள் தங்கள் வகுப்புகள் அனைத்தையும் இணையத்துக்கு மாற்றிவிட முயிஸ் அறிவுறுத்தியுள்ளது.

