வல்லுநர்: அரசாங்கம் சொல்வதற்கு மேலும் பாதுகாப்பாக மக்கள் செயல்படவேண்டும்
சிங்கப்பூரின் கொவிட்-19 சூழ்நிலை சென்ற ஆண்டு முடக்கம் நடப்புக்கு வந்ததற்கு முன் இருந்ததைவிட இப்போது அதிக ஆபத்தானதாக போய்விடக்கூடும்.
பாதுகாப்புக்குத் தேவையா னவை என்று அரசாங்கம் கூறு வதைச் செய்வதோடு இருந்துவிடா மல் அதற்கு மேலும் பலவற்றை யும் மக்கள் செய்ய வேண்டும் என்று தேசிய தொற்றுநோய் நிலையத்தின் இணைப் பேராசிரியர் டேவிட் லை வலியுறுத்தி கூறுகிறார்.
அரசாங்கம் நடைமுறைப்படுத்தி இருக்கும் நிபந்தனைகளைக் காட்டிலும் மேலும் பலவற்றை இங்குள்ள மக்கள் செய்யவேண்டும் என்று அந்த நிலையத்தின் தொற்றுநோய் ஆய்வு மற்றும் பயிற்சி அலுவலக இயக்குநரான அவர் தெரிவித்தார்.
அவருடைய செய்தி வாட்ஸ் அப்பிலும் இதர சமூக ஊடகத் தளங்களிலும் வலம் வருகிறது.
அந்தச் செய்தி இணைப் பேராசிரியர் டேவிட் லை எழுதியதுதான் என்பது உறுதிபட தெரியவந்து உள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டு உள்ளது.
வீட்டிலேயே தங்கி இருப்பது, கூட்டமான இடங்களைத் தவிர்த்துக்கொள்வது போன்றவற்றோடு மக்கள் தாங்களாகவே சிறிய சமூக பாதுகாப்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
அந்த வட்டத்தைத் தாண்டாமல் அதற்குள்ளாகவே நடமாட உறுதி பூண்டு இருப்போரை மட்டுமே அந்தப் பாதுகாப்பு வட்டம் கொண்டிருக்கவேண்டும்.
அவர்களில் பலர் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று டான் டோக் செங் மருத்துவமனையின் தொற்றுநோய்த் துறை மூத்த ஆலோசகருமான பேராசிரியர் கூறுகிறார்.
பூங்காக்களில் நடக்கும்போது கூட வாயையும் மூக்கையும் மூடியபடி முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தடுப்பூசியை மக்கள் போட்டுக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சென்ற ஆண்டில் நிலைமை மோசமாக இருந்தது. வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் தொற்று அதிகமாக இருந்தது. அது அரும்பாடுபட்டு கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லாமல் கிருமி தொற்றும் சம்பவங்கள் அதிகமாகி இருக்கின்றன.
இதை வைத்துப் பார்க்கையில் சாங்கி விமான நிலைய தொற்றில் இருந்து சமூகத்திற்கு அதிக அளவில் கிருமி பரவி இருக்கலாம் என்று அனுமானிக்க முடிகிறது என்றார் அவர்.
பாதிக்கப்பட்டவர்களில் 40 விழுக்காடு முதல் 50 விழுக்காட்டினருக்கு அறிகுறிகள் தெரிவதில்லை. என்றாலும் அவர்கள் மூலம் வேகமாக தொற்று பரவக்கூடும். இதர 10 விழுக்காட்டினருக்கு ஆக்சிஜன் தேவைப்படும் அளவுக்குப் பாதிப்பு ஏற்படலாம்.
சிங்கப்பூரில் ஆற்றல்மிக்க தடுப்பு மருந்து சிகிச்சை பரிசோதனை வசதிகள் இருக்கின்றன.
ஆனால் இந்தியாவில் இருந்து பரவி இருக்கும் புதிய உருமாறிய கிருமிகள் முகக்கவசங்கள், தடுப்பூசிகள் எல்லாவற்றையும் மீறி இங்கு பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இது மோசமான ஒன்று என்றார் அவர்.
"உங்கள் குடும்பத்தைப் பாதுகாப்பாக காப்பாற்ற நீங்கள் விரும்பினால் மேலே கூறியதை காதுகொடுத்து கேட்டு அவ்வாறே செயல்படுங்கள்," என்று அவர் தெரிவித்து உள்ளார்.

