சிங்கப்பூரில் நேற்று புதிதாக 21 பேருக்கு சமூகத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் 11 பேர் தொடர்பு இல்லாதவர்கள். இதர 10 பேர் முன்பு கிருமி தொற்றி இருந்தோருடன் தொடர்புடையவர்கள்.
சமூகத்தொற்றுக்கு ஆளானவர்களில் ஆறு பேர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
நேற்று மொத்தம் 28 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. ஏழு பேர் வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்தவர்கள்.
தனிமையில் இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
ஊழியர் தங்குவிடுதிகளில் நேற்று புதிதாக தொற்று யாருக்கும் இல்லை. கொவிட்-19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 61,613 ஆகி இருக்கிறது.
இதனிடையே, மரினா பே சேண்ட்ஸ் நிறுவனம் துப்புரவுப் பணிகளுக்காக தன்னுடைய சூதாட்டக் கூடத்தைத் தற்காலிகமாக மூடுவதாக தெரிவித்தது.
சூதாட்டக் கூட ஊழியர்கள் இரண்டு பேருக்குத் தொற்று இருந்தது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. ஞாயிறன்று சமூகத்தில் 38 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளானார்கள்.
அவர்களில் 21 பேர் முந்தைய நோயாளிகளுடன் தொடர்புடையவர்கள். நான்கு தொடக்கப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட மேலும் ஒன்பது பேர் லேர்னிங் பாயிண்ட் கல்வி நிலைய தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர்கள்.
சிங்கப்பூர் பலதுறை தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் ஒருவருக்கு சனிக்கிழமை தொற்று உறுதியானதாக அந்தப் பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
அந்த மாணவர் சென்றிருந்த கல்லூரி வளாகம் முற்றிலும் மருந்தடித்து சுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடைய, ராஃபிள்ஸ் மருத்துவமனையில் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகி இருந்த தாதி ஒருவருடன் அணுக்கத் தொடர்பில் இருந்த அனைவருக்கும் தொற்று இல்லை என்பது பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.
சமூகத்தில் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாமல் 17 பேருக்கு தொற்று ஏற்பட்டதாகவும் அவர்களில் அந்த 29 வயது தாதியும் ஒருவர் என்றும் ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து அவருடன் அணுக்கத் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு யாருக்கும் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்த விவரங்களை ராஃபிள்ஸ் மருத்துவக் குழுமம் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்து உள்ளது.

