சிங்கப்பூரில் கடந்த ஏப்ரல் மாதம் புதிய தனியார் வீடுகள் விற்பனை மார்ச் மாதத்தைவிட குறைந்தது. இருந்தாலும் சென்ற ஆண்டு ஏப்ரலுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஏப்ரலில் விற்பனை மும்மடங்கிற்கும் அதிகமாக உள்ளது.
2017க்குப் பிறகு ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற அதிக விற்பனை இதுவே ஆகும்.
சென்ற மாதம் 1,262 வீடுகள் வாங்கப்பட்டன. மார்ச் மாதம் கைமாறிய வீடுகளின் எண்ணிக்கை 1,296 ஆக இருந்தது. 2020 ஏப்ரலில் 227 வீடுகள்தான் விற்கப்பட்டன. இதனுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாத விற்பனை 356% கூடின.
இதனிடையே, வீடுகளைக் கட்டி விற்பவர்கள் ஏப்ரல் மாதம் 1,038 வீடுகளை விற்பனைக்குக் கொடுத்தனர். மார்ச் மாதத்தில் விற்பனைக்கு வந்த 959 வீடுகளைவிட இது 8% அதிகம்.
ஆண்டுக்காண்டு அடிப்படையில் பார்க்கையில் இந்த ஆண்டு ஏப்ரலில் விற்பனைக்குக் கொடுக்கப்பட்ட வீடுகள் 62% அதிகம். நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் மூலம் இந்த நிலவரங்கள் தெரியவருகின்றன.
இவற்றில் எக்ஸிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகள் உள்ளடங்காது.
இந்தக் கூட்டுரிமை வீடுகளைச் சேர்த்துப் பார்க்கையில் சென்ற மாதம் 1,342 புதிய வீடுகள் விற்கப்பட்டன. மார்ச் மாதம் கைமாறிய வீடுகளைவிட இது 2.3 விழுக்காடு குறைவு. இந்த ஆண்டின் முதல் 4.5 மாதங்களில் எட்டு முறை புதிய வீடுகள் விற்பனைக்கு வந்தன.
இந்த நிலையில், கொஞ்சம் இடைவெளி விடும் வகையில் மே, ஜூன் மாதங்களில் புதிய வீடுகள் விற்பனைக்கு வராது என்று 'ஹட்டன்ஸ் ஏஷியா' நிறுவன தலைமை நிர்வாகி மார்க் யிப் கூறுகிறார். மே 16 முதல் ஜூன் 13 வரை கடுமையான கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கும் என்பதால் சந்தை கொஞ்சம் மெதுவடையும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஜூலை மாதம் ஐந்து இடங்களில் புதிய வீடுகள் விற்பனைக்கு வரும் வாய்ப்பு இருக்கிறது. விற்பனை குறைந்தாலும் விலை அதிகம் உள்ள வீடுகள் அதிக எண்ணிக்கையில் கைமாறி உள்ளதாக ஆரஞ்சுடீ & டை நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரும் பகுப்பாய்வாளருமான திருவாட்டி கிறிஸ்டைன் சன் கூறினார்.
சதுர அடி $2,000க்கும் அதிக விலையில் விற்கப்பட்ட மாடி வீடுகளின் (எக்ஸிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகள் நீங்கலாக) விகிதாச்சாரம் பிப்ரவரியில் 38.8 விழுக்காடாக இருந்தது. இது ஏப்ரலில் 55.4% ஆக கூடியது.
இந்த நிலவரம் பயனீட்டாளர்களிடம் நம்பிக்கை வலுவடைந்து இருப்பதை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது என்றார் அவர்.
ஏப்ரலில் கைமாறிய வீடுகளில் பெரும்பாலானவை நகர விளிம்புப் பகுதியில் அல்லது மத்திய வட்டாரத்தின் இதர பகுதிகளில் இருப்பவை என்பதும் தெரியவந்துள்ளது.
கொவிட்-19 காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்துள்ளதால் கொஞ்ச காலத்திற்கு விற்பனை வேகம் பாதிக்கப்படலாம். இருந்தாலும் சென்ற ஆண்டு முடக்கம் முதலே தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகள் தீவிரப்படுத்தப்பட்டு வந்துள்ளன என்பதையும் திருவாட்டி சன் சுட்டினார்.

