செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
36bd89bc-8101-412c-99e5-67feb017bf7d
-

மானபங்கம்: குற்றவாளிக்கு

சிறை, பிரம்படி தண்டனை

தனக்குச் சிகை அலங்காரம் செய்த பெண் ஒருவரை ஜனவரி 2ஆம் தேதி இரண்டு முறை மானபங்கம் செய்த வில்சன் செல்வநேசன், 33, என்பவருக்கு 10 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மூன்று பிரம்படிகள் கொடுக்கும்படியும் உத்தரவிடப் பட்டது. அந்த 32 வயது மாதை மானபங்கம் செய்ததாகக் கூறும் இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு இருந்தார். மேல் விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

தொழிலதிபர் மீது மேலும் ஏழு குற்றச்சாட்டுகள்

'என்வி அசெட் மேனேஜ்மண்ட் அண்ட் என்வி குளோபல் டிரேடிங்' என்ற நிறுவனத்தின் இயக்குநரான இங் யு ஸி, என்ற 34 வயது தொழிலதிபர், நிக்கல் உலோகத் தொழில் துறையில் முதலீடு செய்த பலருக்கும் சொந்தமான $1 பில்லியனுக்கும் அதிக தொகையை மோசடி செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

முதலீடு செய்வோருக்கு மூன்று மாத காலத்தில் சராசரியாக 15% வருவாய் கிடைக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை. இதன் தொடர்பில் ஏமாற்றியது, தில்லுமுல்லு, மோசடி தொடர்பான 11 குற்றச்சாட்டுகள் அவர் மீது ஏற்கெனவே சுமத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நேற்று மேலும் ஏழு குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்கினார். $24 மில்லியனுக்கும் அதிக தொகை தொடர்பில் அவர் பலரையும் ஏமாற்றி இருக்கிறார் என்று இந்தக் குற்றச்சாட்டுகள் கூறுகின்றன.

கொவிட்-19 தொற்று என்று பொய் சொன்னதாக குற்றச்சாட்டு

சான் கின் நாங் பால், 40, என்ற ஆடவர், சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் பிற்பகல் 12.47 மணிக்கு நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளரான லாவ் ஸென் ஜுயென் என்பவருக்கு மின்னஞ்சல் அனுப்பினார்.

'கொவிட்-19 தொற்று காரணமாக மருத்துவமனையில் தனிமையில் இருக்கிறேன். ஆகையால் நாளை நடக்க இருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாது' என்று அவர் அனுப்பிய மின்னஞ்சல் தெரிவித்தது. இது பொய் என்பது தெரியவந்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

ஆய்வாளரிடம் பொய் சொன்னதாக நேற்று சான் மீது குற்றம் சுமத்தப்பட்டது. சான் ஜூன் 14ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறைவான ஊழியர்களுடன் சேவை நிலையங்கள் செயல்படும்

சிங்கப்பூரில் சமூக அளவில் கொவிட்-19 தொற்று அதிகரிப்பதால், அதிகாரிகளின் பாதுகாப்பைக் கருதி குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் சேவை நிலையங்கள் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர் களுடன் செயல்படும். இப்போது நடப்புக்கு வந்துள்ள கடும் கட்டுப்பாடுகளையொட்டி ஜூன் 13 வரை இது இடம்பெறுவ தாக உள்துறை அமைச்சு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டும் இணையம் வழி சிங்கப்பூர் புத்தகச் சந்தை

சிங்கப்பூர் புத்தகச் சந்தை மே 29ஆம் தேதி முதல் ஜூன் 6ஆம் தேதி வரை நடக்கும். என்றாலும் அந்த 36வது சந்தை இந்த ஆண்டும் இணையம் வழியாகவே நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தை எல்லாருக்கும் பல்வேறு வழிகளிலும் உதவும். சிறார்களுக்குக் கதை சொல்லும் நிகழ்ச்சி முதல் உரை நிகழ்ச்சிகள் வரை பலவும் இடம்பெறும். கட்டணத் தள்ளுபடிகள், மொத்தம் $9,000 மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள் எல்லாம் உண்டு. சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் சீன ஊடகக் குழுமம் ஏற்பாட்டுடன் நடக்கும் இந்த இணையச் சந்தை, சாவ் பாவ் சீன நாளிதழின் இலக்கிய விழாவுடன் சேர்ந்து நடக்கிறது.

விரைவில் தடமறிவதை சாத்தியமாக்கும் வேக சோதனை

சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிய 30 நிமிடங்களில் முடிவு தெரியவரும் வேகப் பரிசோதனை நடைமுறை தொடங்கி இருக்கிறது.

இதனால் கொவிட்-19 நோயாளிகளின் நடமாட்டங்களை விரைவில் தெரிந்துகொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.

மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அமைச்சர், இந்த வேகப் பரிசோதனைக் கருவிகள் 900 பொது சுகாதார ஆயத்த மருந்தகங்களில் 236க்கு விநியோகிக்கப் பட்டுள்ளதாகவும் இதர மருந்தகங்களுக்கும் அவை கொடுக்கப்படும் என்றும் கூறினார்.