புதிய கட்டுப்பாடுகளால் முகம் வாடிய அங்காடி கடைக்காரர்கள்

புதிய கட்டுப்பாடுகளால் முகம் வாடிய அங்காடி கடைக்காரர்கள்

2 mins read
c4de1e20-fdfe-43af-8ec0-1cb3913b4e87
-

உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிடத் தடை உத்தரவு நடப்புக்கு வந்த இரண்டாவதுநாளான நேற்று நாடெங்கும் உணவுக் கடைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

வழக்கமாக மக்கள் கூட்டம் நிறைந்திருக்கும் தேக்கா சந்தை உணவங்காடி நிலையத்தில் நேற்று வெகு சிலரே காணப்பட்டனர். கிட்டத்தட்ட அனைத்து மேசைகளின் மீதும் இருக்கைகளின் மீதும் பிளாஸ்டிக் போர்வை போர்த்தப்பட்டுள்ளன.

புதிதாக உருமாறிய கொவிட்-19 கிருமி வகையால் வாடிக்கையாளர்கள் இடையே பயம் அதிகரித்துள்ளதைத் தாம் உணர்வதாக உணவங்காடி நிலையத்திலுள்ள முகம்மது ஹனிஃபா பானக் கடையில் பணியாற்றும் ரமேஷ் லட்சுமணன், 41, தெரிவித்தார். "உணவு வாங்க பலர் வந்தாலும் காப்பி, குளிர்பானங்கள் போன்றவற்றை வாங்க பெரும்பாலானோர் வருவதில்லை. இந்த நிலைமை மேலும் மோசமாகும் என நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார்.

வீட்டிலிருந்து பணியாற்றும் ஏற்பாடுகளுக்கு அலுவலக ஊழியர்களில் பலர் மீண்டும் மாறியுள்ளதால் புதிய கட்டுப்பாட்டுக்கு முன்னரே வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வந்ததாக 'சிவானிஸ் புட்' கடையின் உரிமையாளர் ஜெ. மல்லிகா, 40, தெரிவித்தார். "வழக்கமாக எங்களிடம் அடிக்கடி வாங்கும் சிலர் தொடர்ந்து எங்களை நாடி வருவதால் நிலைமையை ஓரளவுக்கு கையாள முடிகிறது," என்று அவர் கூறினார்.

வாடிக்கையாளர்கள் வர முடியாத பட்சத்தில் உணவுக் கடைகளின் விநியோகச் சேவைகளால் ஏற்படும் செலவைக் குறைக்க அரசாங்கம் உதவப் போவதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.

இன்று முதல் ஜூன் 15ஆம் தேதிவரை, கிராப்ஃபுட். ஃபுட்பாண்டா, டெலிவரூ ஆகிய தளங்களுக்கு கடைகள் தர வேண்டிய தரகுக் கட்டணங்களில் என்டர்பிரைஸ் சிங்கப்பூர் 5 விழுக்காடு ஏற்கும். அதே காலக்கட்டத்தில் லாலமோவ், ஜீக் லாஜிஸ்டிக்ஸ், பிக்அப் போன்ற அமைப்புகளின் மூலமாக செய்யப்படும் உணவு விநியோகங்களுக்கு 20 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும்.

இத்தகைய உதவிகள் மீண்டும் தலைதூக்குவது நல்லது என்று அலாவுதீன் பிரியாணி உணவுக்கடையில் பணியாற்றும் 43 வயது ஜி.பக்ரத் தெரிவித்தார். "ஊழியர்களுக்குப் பற்றாக்குறையாக இருக்கும் கட்டத்தில் உணவு விநியோக முன்பதிவுகளை ஏற்பது சிரமம் என்றாலும் அதனை சேவை மனப்பான்மையுடன் செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார்.

ஆயினும், இந்த மின்தளங்களைப் பயன்படுத்தத் தயங்குவதாகக் கூறிய ஜமால் சப்பாத்தி கடையின் உரிமையாளர் காசி முத்துக்குமார், இது குறித்த வழிக்காட்டுதல் தமக்குத் தேவைப்படுவதாகக் கூறினார்.

சிங்கப்பூரில் கொவிட்-19 சமூகத் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் உணவுக் கடைகளில் உட்கார்ந்து சாப்பிட மே 16ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகளில் உணவை வாங்கிச் செல்ல வேண்டும் அல்லது விநியோக சேவைகளை நாட வேண்டும்.