சுகாதார அறிவியல் ஆணையம் சினோவாக் தடுப்பூசி மருந்தின் பாதுகாப்பையும் செயல்திறனையும் இன்னமும் மதிப்பிட்டு வருகிறது.
அதன் தொடர்பில் மருந்து உற்பத்தியாளரிடமிருந்து கூடுதல் தரவு களுக்காக ஆணையம் காத்திருப்பதாகவும் சுகாதார அமைச்சின் மருத்துவச் சேவைகள் பிரிவின் இயக்குநர் இணைப் பேராசிரியர் கெனத் மாக் நேற்று நடைபெற்ற பல அமைச்சுநிலை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
சிங்கப்பூர் அந்த மருந்தை முன்கூட்டியே வாங்கி வைக்க உற்பத்தி யாளருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் கீழ், கடந்த பிப்ரவரி 23ம் தேதி இங்கு சினோவாக் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டன.
ஆனால் அவற்றை இங்குப் பயன்படுத்த இன்னும் ஆணையம் அனுமதி வழங்கவில்லை.
உற்பத்தியாளர் கூடுதல் தகவல் களைத் தரக் காத்திருக்கும் வேளையில், மற்ற நாடுகளில் சினோவாக் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை ஆணையம் கண்காணித்து வருவதாக திரு மாக் தெரிவித்தார்.
மற்ற நாடுகளிலிருந்து கிடைக்கும் தரவுகளை தனது மதிப்பீட்டுக்குப் பயன்படுத்திக் கொள்வது பற்றியும் ஆணையம் ஆராந்து வருவதாகக் கூறினார் இணைப் பேராசிரியர் மாக்.
சினோவாக் தடுப்பூசி மருந்தை உலக சுகாதார நிறுவனமும் தற்போது ஆய்வு செய்து மதிப்பிட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
உலகம் முழுவதும் தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தில் சினோவாக் தடுப்பூசிகளைச் சேர்ப்பது பற்றி அமைப்பு "மிக விரைவில்" முடிவு எடுக்கும் என்றும் இணைப் பேராசிரியர் மாக் சொன்னார்.
சினோவாக் தடுப்பூசி பாதுகாப்பாகவும் செயல்திறன் மிக்கதாகவும் இருந்தால்தான் அதனை இங்கு பயன்படுத்த சுகாதார அறிவியல் ஆணையம் ஒப்புதல் அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்
சினோவாக் தடுப்பூசி மருந்துகளின் ஆயுள் காலம் இரண்டு ஆண்டு களாகும்.
அவற்றை இங்கு பயன்படுத்த அனுமதி கிடைத்தால், முடிந்தவரை விரைவாக பயன்படுத்தும் வழிகளைப் பற்றி அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் இணைப் பேராசிரியர் மாக் தெரிவித்தார்.

