இர்ஷாத் முஹம்மது
கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான முயற்சி வெற்றிபெற தடுப்பூசிப் போட்டுக்கொள்வது முக்கியம். அறுபது வயது மற்றும் அதற்கு மேலான வயதுடைய முதியோரில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியானவர்களில் 71 விழுக்காட்டினர் இதுவரை தடுப்பூசிப் போட்டுக் கொண்டுள்ளனர்.
தகுதியான 45 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 66 விழுக்காட்டினர் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டோ அதற்கு முன்பதிவு செய்தோ உள்ளனர்.
இத்தகவல்கள் கொவிட்-19 கிருமித்தொற்றை எதிர்கொள்ள அமைக்கப்பட்டுள்ள அமைச்சுகள் நிலை பணிக்குழுவின் செய்தியாளர் கூட்டத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டன.
தடுப்பூசி போட விரும்பாதவர்களால் மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுமா என்ற தமிழ் முரசின் கேள்விக்கு அமைச்சர்களும் மருத்துவச் சேவைகள் இயக்குநரும் பதிலளித்தனர்.
"பலர் தாங்களே முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்வது வரவேற்கத்தக்கது. அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டால் அது ஒட்டுமொத்த சமூகத்திற்கு கூடுதல் பாதுகாப்பைத் தரும்," என்று மருத்துவ சேவைகள் இயக்குநர் இணைப் பேராசிரியர் கென்னத் மாக் தெரிவித்தார்.
"தடுப்பூசிப் போட்டுக்கொண்டவர்களுக்கு கிருமித்தொற்று ஏற்பட்டால் அறிகுறிகள் இருக்காது. அல்லது இலேசான அறிகுறிகள் மட்டுமே தென்படக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிருமித்தொற்று ஏற்படும் சாத்தியமும் குறைவு. மேலும் தொற்று ஏற்பட்டுள்ளவரால் பிறருக்கு தொற்றாமல் இருக்கவும் தடுப்பூசிகள் உதவும்," என்றார் திரு மாக்.
"ஏறத்தாழ 70 அல்லது 80% மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் இலக்கு இருப்பது நல்லது. அனைவரது ஒத்துழைப்புடன் அதனை அடையலாம்," என்றார் அவர்.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்துகொள்ளவேண்டும் என்று பணிக்குழுவின் இணைத் தலைவரான நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
"தடுப்பூசி போட்டுக்கொள்ள மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கவேண்டும். அதே நேரம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமாகப் பின்பற்றுவதை தடுப்பூசிப் போட்டுக்கொண்டவர்களும் உறுதிச்செய்யவேண்டும்," என்றார் அவர்.
சுகாதார அமைச்சரும் பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு ஓங் யி காங், தடுப்பூசி போட்டுக்கொள்ள தற்போது விரும்பாதவர்களும் பிறகு போட்டுக்கொள்ள ஆர்வம் தெரிவிக்க வாய்ப்புள்ளது என்றும் அதற்கு அவர்களுக்கு நேரம் தேவை என்பதால் அதை அவர்களுக்குக் கொடுக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.
"பாதக, சாதகங்களை அவர்கள் பொறுத்திருந்து பார்க்க எண்ணுவார்கள். விநியோகத்திற்கு மேலான தேவை இருப்பதால் தற்போது நாம் அவர்களுக்குத் தேவைப்படும் நேரத்தைக் கொடுக்கலாம்," என்றார் அவர்.

