எல்லைகளை மூடியிருந்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்

எல்லைகளை மூடியிருந்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்

3 mins read
ebdd01f9-ce42-498d-8260-4eeaed17a39f
-

மனிதவள அமைச்சு விரிவான விளக்கம்

கடந்த ஆண்டு நோய்ப் பர­வல் முறி­ய­டிப்­புத் திட்­டத்­திற்­குப் பிறகு சிங்­கப்­பூ­ருக்­குள் வெளி­நாட்டு ஊழி­ய­ர்க­ளை நுழைய அனு­ம­திக்­கா­மல் இருந்­தி­ருந்­தால் குறைந்­தது 100,000 ஊழி­யர்­கள் மற்­றும் 30,000 பணிப்­பெண்­கள் பற்­றாக்­கு­றை­யால் சிங்­கப்­பூர் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டி­ருக்­க­லாம் என்று மனி­த­வள அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இது சிங்­கப்­பூ­ரின் மொத்த வெளி­நாட்டு ஊழி­ய­ர­ணி­யில் கிட்­டத்­தட்ட பத்­தில் ஒரு பங்கு. கடந்த டிசம்­பர் மாத நில­வ­ரப்­படி சிங்­கப்­பூ­ரில் 984,100 வெளி­நாட்டு ஊழி­யர்­களும் 247,400 வெளி­நாட்­டுப் பணிப்­பெண்­களும் வேலை செய்து வந்­த­னர்.

சிங்­கப்­பூர் சென்ற ஆண்டு தனது எல்­லை­களை மூடி­யி­ருந்­தால் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, துப்­பு­ரவு போன்ற அத்­தி­யா­வ­சிய சேவை­கள் உள்­ளிட்ட 70,000 சேவைத் துறை ஊழி­யர்­கள், 30,000 கட்­டு­மான ஊழி­யர்­கள், 30,000 வெளி­நாட்­டுப் பணிப்­பெண்­கள் பற்­றாக்­கு­றையை எதிர்­கொள்ள நேரிட்­டி­ருக்­க­லாம்.

வெளி­நாட்­டில் இருந்து வரும் கொரோனா பாதிப்­பு­க­ளைத் தடுக்க சிங்­கப்­பூர் தனது எல்­லை­களை முழு­வ­து­மாக மூட வேண்­டும் என்று பொது­மக்­க­ளி­டம் இருந்து குரல்­கள் எழுந்ததை அடுத்து, அமைச்சு விளக்­க­ம­ளித்­துள்­ளது.

"தொழில்­து­றை­க­ளி­லும் குடும்­பங்­க­ளி­லும் கடு­மை­யான தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி இருக்­க­லாம்," என்று அமைச்சு தெரி­வித்­தது.

இம்­மா­தம் 2ஆம் தேதி­யில் இருந்து தெற்­கா­சி­யா­வில் இருந்து அனைத்து வரு­கை­களும் நிறுத்­தப்­பட்­டி­ருப்­ப­தாக அமைச்சு குறிப்­பிட்­டது.

"அதே வேளை­யில், மனி­த­வ­ளப் பற்­றாக்­கு­றைக்­குத் தீர்­வு­காண அதி­க­மான ஊழி­யர்­கள் சிங்­கப்­பூருக்கு வர அனு­ம­தியளிக்க வேண்­டும் என்று தொழில் நிறு­வ­னங்­கள் வேண்­டு­கோள் விடுத்து வரு­கின்­றன," என்று அமைச்சு கூறி­யது.

இத­னி­டையே, கட்­டு­மா­னம் மற்­றும் உரு­வாக்­கப்­பட்ட சுற்­றுச்­சூ­ழல் துறை­க­ளின் முக்­கி­யப் பிர­தி­நி­தி­கள், பாது­காப்­பான, கட்­டுப்­பா­டான முறை­யில் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் சிங்­கப்­பூ­ருக்கு வர அனு­ம­திக்க வேண்­டும் என்று நேற்று முன்­தினம் அர­சாங்­கத்­தி­டம் வேண்­டு­கோள் விடுத்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், கடந்த ஆண்­டில் இங்கு வந்த வெளி­நாட்டு ஊழி­யர்­களை விட, இங்­கி­ருந்து வெளி­யே­றிய ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­மாக இருந்­தது என்­றும் தங்­க­ளது ஒப்­பந்த காலம் முடிந்­த­தும் ஊழி­யர்­களில் பல­ரும் சொந்த நாட்­டிற்­குத் திரும்­பிச் செல்­கின்­றனர் என்­றும் அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

வெளி­நாட்­டில் இருந்து வரு­வோர் மூலம் கொரோனா தொற்­றும் அபா­யத்­தைக் குறைப்­ப­தற்­காக எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டுள்­ள­தால், இங்­கி­ருந்து வெளி­யே­றிய ஊழி­யர்­க­ளுக்கு ஈடா­கப் போதிய அள­வில் வேறு ஊழி­யர்­க­ளைப் பணி­ய­மர்த்த இய­ல­வில்லை.

கடந்த ஆண்டு நோய்ப் பர­வல் முறி­ய­டிப்­புத் திட்­டத்­திற்­குப் பிறகு இது­வரை எத்­தனை வெளி­நாட்டு ஊழி­யர்­கள் சிங்­கப்­பூ­ருக்கு வந்­து உள்­ள­னர் என்ற விவ­ரத்தை அமைச்சு வெளி­யி­ட­வில்லை.

ஆயி­னும், சென்ற ஆண்டு மார்ச்­சில் இருந்து இவ்­வாண்டு ஏப்­ரல் வரை ஒவ்­வொரு மாத­மும் கட்­டு­மா­னம், கடல், செயல்­முறை, சேவை ஆகிய துறை­க­ளைச் சேர்ந்த கிட்­டத்­தட்ட 5,600 வேலை அனு­ம­திச்­சீட்டு ஊழி­யர்­களும் எஸ்-பாஸ் ஊழி­யர்­களும் வெளி­யே­றி­விட்­ட­தாக மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் கடந்த வாரம் நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தி­ருந்­தார்.

மனி­த­வ­ளப் பற்­றாக்­கு­றை­யைப் போக்­கும் வித­மாக கடந்த நவம்­பர் மாதத்தில் இருந்து சரா­ச­ரி­யாக ஒரு மாதத்­திற்கு 5,100 வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு நுழைவு அனு­மதி வழங்­கப்­பட்­டது.

கடந்த 2020ஆம் ஆண்­டில் கட்டு­மா­னம், கடல்துறை, செயல்முறை தொழில்துறை ஆகிய துறை­களில் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்கை 16% குறைந்­தது. அதா­வது, 370,100ல் இருந்து 311,000ஆகக் குறைந்­தது.