கடல்மட்ட உயர்வில் இருந்து சிங்கப்பூரின் குறிப்பிட்ட கடலோரப் பகுதிகளைப் பாதுகாப்பது எப்படி என்பது தொடர்பான நான்கு ஆய்வுகளில் முதலாவது ஆய்வு அடுத்த வாரம் தொடங்கவிருக்கிறது.
அந்த ஆய்வு, தீவின் தென்கிழக்குப் பகுதிக்கு உட்பட்ட 57.8 கிலோமீட்டர் நீள கடலோரப் பகுதியில் கவனம் செலுத்தும். சாங்கி, ஈஸ்ட் கோஸ்ட்-மரினா பே வட்டாரத்திற்கு இடைப்பட்ட நீட்சி, பரந்த தெற்கு நீர்முகப்பு வட்டாரம் (கிரேட்டர் சௌதர்ன் வாட்டர்ஃபிரன்ட்) ஆகிய மூன்று முக்கியப் பகுதிகள் அதில் அடங்கும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் நேற்று தெரிவித்தது.
இந்த நகரம் - ஈஸ்ட் கோஸ்ட் கடலோரப் பகுதி நீட்சியானது, குறிப்பிட்ட கடலோரப் பகுதி பாதுகாப்பு ஆய்வுகளுக்குக் கழகம் அடையாளம் கண்டுள்ள நான்கு பகுதிகளில் ஒன்று. லிம் சூ காங், சுங்கை காடுட், ஜூரோங் தீவு ஆகியவை மற்ற மூன்று பகுதிகள்.
ஜூரோங் தீவு மற்றும் சுங்கை காடுட், லிம் சூ காங் பகுதிகளை உள்ளடக்கிய வடமேற்கு கடலோரப் பகுதி ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான ஆய்வுகள் முறையே இவ்வாண்டின் பிற்பகுதியிலும் 2022ஆம் ஆண்டிலும் இடம்பெறும் என்று கழகம் தெரிவித்துள்ளது.
நகரம் - ஈஸ்ட் கோஸ்ட் நீட்சிப் பகுதிக்கான ஆய்வை 'சிபிஜி கன்சல்டன்ட்ஸ்' நிறுவனம் மேற்கொள்ளும் என்றும் அந்த ஆய்வு முடிவதற்கு ஏறத்தாழ நான்காண்டுகள் ஆகலாம் என்றும் கழகம் கூறியது.
மற்ற நாடுகள் தங்களது கடலோரப் பகுதிகளை எவ்வாறு பாதுகாத்து வருகின்றன என்பது குறித்த எழுத்துப்பூர்வ மறுஆய்வு, தரவுச் சேகரிப்பு, தகவமைப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிமுறைகள் உருவாக்கம், வெள்ள அபாயத் தடுப்புத் தீர்வுகள் உருவாக்கம் ஆகிய அம்சங்களில் ஆய்வு இடம்பெறும்.
ஒரு தீவு நாடாக, கடல்மட்ட உயர்வால் சிங்கப்பூர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எரிசக்திக்காக புதைபடிம எரிபொருள்களை எரிப்பது போன்ற மனித நடவடிக்கைகளால் புவி வெப்பம் அடைந்து வருவதற்கு கடல்மட்ட உயர்வு ஓர் அறிகுறியாகச் சொல்லப்படுகிறது.
பசுமை இல்ல வாயுக்கள் படலம் வளிமண்டலத்தைச் சூழ்வதால் புவி வெப்பமடைகிறது; கடல்நீர் விரிவடைகிறது; நிலப்பரப்பில் உள்ள பனி உருகுகிறது. விளைவாக, கடல்மட்டம் அதிகரித்து, தாழ்வான பகுதிகளை மூழ்கடிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக, நகரம்-ஈஸ்ட் கோஸ்ட் நீட்சி கடலோரப் பகுதி எளிதில் பாதிக்கப்படும் அபாயமுள்ளது. விமான நிலையம், நீர்ச் சுத்திகரிப்பு ஆலை, கடற்படைத்தளம் ஆகிய முக்கிய உள்கட்டமைப்புகள் அந்தப்பகுதியில் அமைந்துள்ளன.
பரந்த தெற்கு நீர்முகப்பு வட்டாரம், நகர்ப்புற வாழ்விடப் பகுதியாக உருமாற்றப்படும்.
"உள்ளூர் மேம்பாடு மற்றும் நிலப் பயன்பாட்டுத் திட்டங்களுடன் நன்கு ஒருங்கிணைக்கும் வகையில், பொறியியல் மற்றும் புத்தாக்க வடிவமைப்புகளுடன் கூடிய இயற்கை சார்ந்த தீர்வுகளை ஆராய இது ஒரு நல்ல வாய்ப்பு," என்றார் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் கடலோரப் பாதுகாப்புப் பிரிவு இயக்குநர் ஹேசல் கூ.
இதனிடையே, கடலோரப் பொறியியல் துறையில் கடலோரப் பாதுகாப்பு முகவையின் அறிவுத்திறனையும் நிபுணத்துவத்தையும் மேம்படுத்த உள்ளூர், வெளிநாட்டு நிபுணர்கள் ஐவர் அடங்கிய கடலோரப் பாதுகாப்பு நிபுணர் குழுவைக் கழகம் அமைத்துள்ளது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகப் பேராசிரியர் சான் எங் சூன் அதன் தலைவராக இருப்பார்.

