தயார்நிலை தேசிய சேவையாளர்களுக்கான முகாம் பயிற்சி ஒத்தி வைக்கப்படுவதாகவும் தனிநபர் உடலுறுதிச் சோதனை மற்றும் பிற உடற்தகுதிப் பயிற்சி அடுத்த மாதம் 13ஆம் தேதி வரை தற்காலிக நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
செயல்பாடுகளுக்கு அவசியம் எனக் கருதப்படும் முகாம் பயிற்சி மட்டும் தொடரும்.
உடற்தகுதி நிலையங்கள் மூடப்படும். உடற்தகுதி நிலையங்கள், சாஃப்ரா உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் பொது இடங்களில் நடத்தப்படவிருந்த தனிநபர் உடல் உறுதிச் சோதனையும் தேசிய சேவை உடற்தகுதி மேம்பாட்டுப் பயிற்சியும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பெரிய அளவிலான நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும், ஒத்திவைக்கப்படும் அல்லது அளவு குறைக்கப்படும் என்று அமைச்சு கூறியது.
தயார்நிலைப் பிரிவுகளை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் கடும் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளுடன் தொடரும்.
சிங்கப்பூர் ஆயுதப்படையினருக்கான தடுப்பூசித் திட்டம் சீரான முன்னேற்றத்தை எட்டி வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சு, பெரும்பாலாருக்கு இவ்வாண்டு நடுப்பகுதியில் தடுப்பூசி போடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தது.
"கூடுதல் முன்னெச்சரிக்கையாக, அடிப்படை ராணுவப் பயிற்சி பாதுகாப்பாக நடத்தப்படுவதை உறுதிசெய்ய, இம்மாதத்தில் சேரும் சேவையாளர்களுக்கும் அவர்களின் பயிற்றுநர்களுக்கும் எச்சில்/சளி மாதிரி சோதனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது," என்று அமைச்சு கூறியுள்ளது.
அத்துடன், கொவிட்-19 பரவல் நிலைமையை சிங்கப்பூர் ஆயுதப்படை தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் தங்களின் சேவையாளர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நடவடிக்கைகள் தொடர்ந்து மறுஆய்வு செய்யப்படும் என்றும் அமைச்சு தெரிவித்து இருக்கிறது.

