வெளிநாட்டுப் பணிப்பெண் ஒருவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட பிறகும் வேலையைத் தொடர தம்மிடம் அனுப்பிவைக்கப்பட்டது தொடர்பில் அவரின் முதலாளி தெரிவித்திருந்தது குறித்து மனிதவள அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி இந்தோனீசியாவில் இருந்து வந்த அந்த பணிப்பெண், கொவிட்-19 பரிசோதனை செய்துகொண்டார். அப்போது அவருக்குக் கிருமி பாதிப்பு இல்லை என்று பரிசோதனை முடிவு காட்டியது.
இருப்பினும், அவர் ஏற்கெனவே கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டுவந்துள்ளது தெரியவந்தது. அவரது உடலில் கொவிட்-19 தொடர்பான எதிர்ப்பாற்றல் கண்டறியப்பட்டது. எனவே, அவர் நிலை பாதுகாப்பானது என்று மதிப்பீடு செய்யப்பட்டு, வீட்டில் தங்கும் உத்தரவிலிருந்து ஏப்ரல் 13ஆம் தேதி விடுவிக்கப்பட்டார்.
ஆயினும், கொவிட்-19 நிலவரம் மோசமடைந்து வருவதை அடுத்து, முன்னெச்சரிக்கையாக அப்பணிப்பெண்ணுக்கு ஏப்ரல் 30ஆம் தேதியன்று மீண்டும் கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரை கிருமி தொற்றியுள்ளதாகப் பரிசோதனை முடிவுகள் காட்டினாலும், முன்னர் ஏற்பட்ட தொற்று பாதிப்பால் அவரிடமிருந்து இறந்த கிருமிக்கூறுகள் வெளிப்படுகின்றன என்பதற்கான அறிகுறிகள் இருந்ததாக அமைச்சு விளக்கம் அளித்தது.
'பிசிஆர்' சோதனை முடிவு அவருக்குத் 'தொற்று இல்லை' எனக் காட்டியது. ஆனாலும், 'சிராலஜி' சோதனையில் அவருக்குத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது, அவர் முன்னைய தொற்றில் இருந்து மீண்டுவிட்டதற்கான அறிகுறி என்று அமைச்சு கூறியது.
வீட்டில் தங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மூன்றாவது நாளிலேயே அவரை விடுவித்தது பாதுகாப்பானதா என்று ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் சமூக ஊடகத் தளங்கள் வழியாக தமது அக்கறையை வெளிப்படுத்தியிருந்தார் அப்பணிப்பெண்ணின் முதலாளியான திருவாட்டி ஜேட் ரசிஃப்.
பணிப்பெண்ணுடன் தொடர்பில் இருந்தபோதும் தமக்கு ஏன் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும் அவர் கேட்டிருந்தார்.
அதற்கு, பணிப்பெண்ணிடம் இருந்து தொற்று பரவும் அபாயம் இல்லை என்று உறுதிசெய்த பின்னரே மே 9ஆம் தேதியன்று அவர் விடுவிக்கப்பட்டார் என்று ஃபேஸ்புக் வழியாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.
பழைய தொற்றிலிருந்து குணம் அடைந்து சிங்கப்பூருக்கு வந்து இருந்த அந்த பணிப்பெண்ணால் முதலாளியின் குடும்பத்திற்கு அபாயம் ஏதுமில்லை என்று அமைச்சு விளக்கம் அளித்திருந்தது.
மனிதவள அமைச்சு கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக முதலாளிகளுக்கு அனுப்பி வரும் மின்னஞ்சலில், அவர்களுடைய இல்லப் பணிப்பெண்கள் மீண்டும் எச்சில்/சளி மாதிரி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கூறி இருந்ததாக பணிப்பெண் முகவர்கள் சிலர் தெரிவித்தனர்.
அந்தக் குறிப்பிட்ட பிரிவினர், வீட்டில் தங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சில நாள்களிலேயே விடுவிக்கப்பட்டவர்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்களில் சிலர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியானதை அடுத்து, தனிமைப்படுத்தப்பட்டனர்.

