அரசாங்க அதிகாரி மீது குற்றச்சாட்டு
நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டத்திற்குப் பிந்திய தளர்வுகள் குறித்த தகவலைச் சட்டவிரோதமாகப் பகிர்ந்துகொண்டதாக 51 வயது அரசாங்க அதிகாரி மீது அரசாங்க இரகசியங்கள் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்படவுள்ளது. அந்தத் தகவலை அவர் கடந்த ஆண்டு ஜூன் 11ஆம் தேதி வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்துகொண்டதாக போலிஸ் தெரிவித்தது. இதையடுத்து, அந்த வகைப்படுத்தப்பட்ட தகவல் குறித்த அறிவிப்பு வெளியாகும் முன்னரே அது பரவலாகப் பகிரப்பட்டதாகக் கூறப்பட்டது. சட்டவிரோதமாக அந்தத் தகவலைப் பெற்று, பகிர்ந்துகொண்டதற்காக அறுவருக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்படும். அரசாங்க இரகசியங்கள் சட்டத்தை மீறுவது கடுமையாகக் கருதப்படும் என போலிஸ் எச்சரித்துள்ளது. குற்றத்தில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டால் $2,000 வரை அபராதம் அல்லது ஈராண்டு வரை சிறை விதிக்கப்படலாம்.
லஞ்சம் தந்த இருவருக்குச் சிறை
நிலப் போக்குவரத்து ஆணையத்தின் துணை குழும இயக்குநருக்கு லஞ்சம் தந்த கட்டுமான நிறுவன ஊழியர்கள் இருவருக்கு எட்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஹென்ரி ஃபூ ஃபங் தை என்பவருக்கு $30,000 கொடுக்க சதி செய்ததாகத் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, டேவூ இன்ஜினியரிங் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் கிம் யங் கியு, 52, திட்ட மேலாளர் ரோ சுங்யங், 49 ஆகிய இருவரும் ஒப்புக்கொண்டனர். $20,000 கடன் தொடர்பில் அவர்கள் மீதான இன்னொரு குற்றச் சாட்டும் தண்டனை விதிக்கப்படுமுன் கவனத்தில் கொள்ளப் பட்டது. அவ்விருவரும் தென்கொரியர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை, குறுக்கு ரயில் பாதை ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை மேற்பார்வை செய்து வந்த ஃபூ, லஞ்சமாக $1.24 மில்லியன் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர் ஊழல், ஏமாற்று தொடர்பில் 36 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
சட்டவிரோத ஒன்றுகூடல்: அபராதம்
மூத்த நடிகர் டெரன்ஸ் சாவ் கோஹுய் வீட்டில் இடம்பெற்ற சட்ட விரோத ஒன்றுகூடலில் பங்கேற்ற ஆடவருக்கு $3,000 அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த அக்டோபரில் இடம்பெற்ற அந்த ஒன்றுகூடலுக்கு ஐவரை மட்டுமே டெரன்ஸ் முதலில் அழைத்ததாகக் கூறப்பட்டது. ஆனால், லான்ஸ் லிம் சீ கியோங், 50, எனும் நண்பர் வேறு நால்வருக்கு அழைப்பு விடுக்கவே, அந்த ஒன்றுகூடலில் கலந்துகொண்டோர் எண்ணிக்கை 12 ஆனது. இரண்டாம் கட்ட கட்டுப்பாடுகள் நடப்பிலிருந்த அந்தக் காலகட்டத்தில் சமூக ஒன்றுகூடலில் ஐவருக்குமேல் இடம்பெறக்கூடாது என்பது விதிமுறை. இதனிடையே, தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள இருப்பதாக சாவ், 53, கடந்த மாதம் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது.
மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
சக மாணவர்களைத் துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி 28 மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. கல்லூரி வளாகத்தில் உள்ள கழிவறை ஒன்றில், ஆடையின்றி மண்டியிட்டு அமர்ந்திருந்த மாணவர்கள் இருவர் மீது மற்ற மாணவர்கள் சிலர் சிறுநீர் கழித்ததாகக் கூறப்பட்டது. கடந்த மார்ச் 22ஆம் தேதி இடம்பெற்ற அச்சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலானது. அதன் தொடர்பில் கடந்த ஏப்ரல் 19-21 தேதிகளில் விசாரணை நடத்திய கல்லூரி, அந்தச் சம்பவத்திற்கு 28 மாணவர்கள் பொறுப்பு எனக் கண்டு பிடித்தது. சீர்திருத்தப் பணி உத்தரவு, இடைநீக்கம் போன்ற ஒழுங்கு நடவடிக்கைகள் அவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ளன.

