கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வீட்டிலிருந்தபடியே கல்வி பயிலும் முறை தொடங்கிய முதல் நாளான இன்று காலை, கற்றல் வளங்களைக் கொண்டிருக்கும் 'மாணவர் கற்றல் தளம்' இணையத்தளத்தைப் பயன்படுத்துவதில் சில மாணவர்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.
தொடக்கநிலை, உயர்நிலை, தொடக்கக்கல்லூரிகள், மில்லீனியா கல்விக் கழகம், சிறப்புக் கல்வி பள்ளிகள் என அனைத்துப் பள்ளி மாணவர்களும் வீட்டிலிருந்தபடியே கல்வி கற்கும் முறை தொடங்கியுள்ள நிலையில் மாணவர் கற்றல் தளத்தின் பயன்பாடு மெதுவடைந்தது தெரியும் என கல்வி அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
"அதனைத் தொடர்ந்து கூடுதல் கணினி வளங்களைச் செயல்படுத்திய பிறகு காலை 9.30 மணியளவில் தளம் பழையபடி பயன்பாட்டுக்கு வந்தது," என அறிக்கை குறிப்பிட்டது. உள்ளூர் சமூகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்ததை அடுத்து, பள்ளிகளில் இந்தத் தவணைக்காலம் நிறைவுறும் நாளான, இம்மாதம் 28ஆம் தேதி வரை மாணவர்கள் வீட்டிலிருந்த படியே கல்வி கற்பார்கள்.
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூறைக் குறைக்கும் நோக்கில் கற்றல் கட்டமைப்பின் செயல்பாட்டை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.
காலை தளத்தைப் பயன்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொண்டவர்களிடம் மன்னிப்புக் கோரியது அமைச்சு. கற்றல் இணையத்தளத்துக்குள் சென்ற பிறகு சில அங்கங்களைப் பயன்படுத்துவதில் மாணவர்கள் சிரமத்தை எதிர்கொண்டதாக சில பெற்றோர் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பகிர்ந்துகொண்டனர்.
கற்றல் இணையத் தளத்துக்குள் நுழைய தொடர்ந்து முயற்சி செய்ததாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வீட்டிலிருந்தபடி கல்வி பயிலும் நிலை ஏற்பட்டபோதும் இந்தக் கற்றல் இணையத் தளப் பயன்பாட்டில் இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தன. அதிகமானோர் அந்தத் தளத்தைப் பயன்படுத்துவதற்கு ஏதுவான மாற்றங்களைச் செய்து உடனடியாக பிரச்சினை சரிசெய்யப்பட்டது என்று கல்வி அமைச்சு அப்போது குறிப்பிட்டது.

