ஏழு கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள்களைக் கைப்பற்றிய மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதன் தொடர்பில் ஏழு பேரைக் கைது செய்துள்ளது.
கிட்டத்தட்ட 2,287 கிராம் ஹெராயின் 5,041 கிராம் 'ஐஸ்', 630 கிராமுக்கும் அதிகமான எக்ஸ்டசி மாத்திரைகள் பிடிபட்டன.
நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இந்தப் பொருள்கள் சிக்கியதாகக் கூறப்பட்டது. ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ 1 பகுதியில் 26,28 வயதுகளில் இருந்த இரு சிங்கப்பூர் ஆடவர்கள் கைதாகினர்.
சாய் சீ ஸ்திரீட்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சிங்கப்பூர் ஆடவர் மூவர் கைதாகினர். வாம்போவில் உள்ள லோரோங் லிமாவ் பகுதியில் மற்றொரு சிங்கப்பூர் ஆடவர் கைதானார். அவருடைய வீட்டில் நிரந்தரவாசி மாது ஒருவர் கைது செய்யப்பட்டார். பிடிபட்டவர்களிடமிருந்து $850,000 மதிப்பிலான போதைப்பொருள்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
ஹெராயின் போதைப்பொருள் பயன்படுத்துவோர் 1,090 பேர், 'ஐஸ்' போதைப்பொருள் பயன்படுத்துவோர் 2,880 பேர் ஆகியோர் ஒரு வார காலத்துக்குப் பயன்படுத்தும் அளவிலான போதைப்பொருள்கள் அவை எனக் கூறப்பட்டது.

