கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளால், ஓட்டுநர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் நோக்கில், இம்மாதம் 18ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 13ஆம் தேதி வரை ஓட்டுநர்கள் வழக்கமாகச் செலுத்தும் வாடகையில் 50% மட்டும் செலுத்தினால் போதும் என கம்ஃபர்ட்டெல்குரோ தெரிவித்துள்ளது.
புதிய கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்த பிறகு வருமானம் குறைந்திருப்பதாக டாக்சி, தனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கும் காலத்தில் டாக்சிகளுக்கான தேவை குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறையும் என எதிர்பார்ப்பதாக கம்ஃபர்ட்டெல்குரோ குழுமத்தைச் சேர்ந்த அதிகாரி டாம்மி டான் குறிப்பிட்டார்.
அதனால் தினசரி வாடகைக் கழிவை முன்பிருந்த 20 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
டாக்சி ஓட்டுநர்களுக்கு மேலும் உதவும் விதத்தில் அவர்கள் செலுத்தும் அழைப்புத் தீர்வைகளுக்கு அடுத்த மாதம் 30ஆம் தேதி வரை விலக்கு அளிப்பதாகவும் திருவாட்டி டான் குறிப்பிட்டார்.

