சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் 6,500 பேருக்கு கொவிட்-19 பரிசோதனை

சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் 6,500 பேருக்கு கொவிட்-19 பரிசோதனை

2 mins read
f5118620-7aff-4536-a053-8eba0e89094c
-

சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயிலும் மூன்று மாணவர்களுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்தப் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள், ஊழியர்கள், உணவு நிலையக் கடைக்காரர்கள் என 6,500 பேருக்கு நேற்றிலிருந்து கொரோனா மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்ததற்கான இதுவரை ஆதாரம் இல்லை என்று சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி கூறியது.

"எங்கள் வளாகத்தில் பயிலும் மூன்று மாணவர்களுக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாலும் அவர்களது வகுப்புகள் அருகருகே இருப்பதாலும் இந்தக் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க முடிவு செய்துள்ளோம். வளாகத்தில் கிருமிப் பரவலுக்கான அபாயத்தைக் குறைக்க இவ்வாறு செய்கிறோம்," என்று சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி தெரிவித்தது.

சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியின் ஐந்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், ஊழியர்கள், உணவு நிலையக் கடைக்காரர்கள் என 6,500 பேருக்கு கொரோனா மருத்துவப் பரிசோதனை நடத்துவது குறித்து முன்னுரிமை வழங்கப்படும்.

கடந்த மாதம் 29ஆம் தேதியன்றும் அதற்குப் பிறகும் வளாகத்தில் இருந்தவர்கள் பரிசோதிக்கப்படுவர்.

கணினிவியல் பள்ளி, ஊடகத் துறை பள்ளி, கலைகள் மற்றும் வடிவமைப்புப் பள்ளி, வர்த்தகப் பள்ளி, இயந்திரவியல் மற்றும் விமானப் பொறியியல் பள்ளி ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன.

தொடர் கல்வி மற்றும் பயிற்சி வகுப்புகள், மின்சாரம் மற்றும் மின்னணுவியல் பொறியியல் வகுப்புகள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கு முதலில் கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.

சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியின் டோவர் சாலை வளாகத்தில் உள்ள விளையாட்டரங்கத்தில் நடத்தப்படும் இந்த மருத்துவப் பரிசோதனை, அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை தொடர்பான விவரங்களை குறுந்தகவல் மூலம் சுகாதார அமைச்சு அனுப்பிவைக்கும்.

முதல் கட்ட பரிசோதனை முடிந்த பிறகு ஒட்டுமொத்த அபாய நிலை குறித்து மறுஆய்வு நடத்தப்படும் என்று தெரிவித்த சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி, அதன் பிறகே மீதமுள்ள மாணவர்கள், ஊழியர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்துவது பற்றி முடிவெடுக்கப்படும் என்று கூறியது.

சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் 14,000க்கும் அதிகமான மாணவர்களும் ஊழியர்களும் உள்ளனர்.