சிங்கப்பூர் நேற்று நண்பகல் நில
வரப்படி மேலும் 38 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் 34 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இந்த 34 பேரில் நான்கு பேருக்கு ஏற்கெனவே பாதிக்கப்பட்டோருடன் தொடர்பு இல்லை. மீதமுள்ள 30 பேர் ஏற்கெனவே கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்கள். இவர்களில் 28 பேர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
வெளிநாடுகளிலிருந்து வந்த நால்வருக்கும் கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் வந்ததும் அவர்
களுக்கு இல்லத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அமைச்சு கூறியது. இவர்களில் மூவர் சிங்கப்பூரர்கள் அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் ஆவர். வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவிடுதிகளில் புதிதாக யாருக்கும் கிருமித்தொற்று ஏற்படவில்லை.
புதிதாகப் பாதிக்கப்பட்டோருடன் சேர்த்து சிங்கப்பூரில் பாதிப்
படைந்தோர் மொத்த எண்ணிக்கை 61,689ஆக அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் புதிதாக 38 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர்களில் 27 பேருக்குச் சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த 27 பேரில் 11 பேருக்கு கிருமித்தொற்று உள்ளோருடன் தொடர்பு இல்லை.
அவர்களில் உள்துறை அமைச்சு ஊழியர் ஒருவரும் புக்கிட் தீமா பிளாசாவில் உள்ள டோரத்திஸ் குழந்தை, சிறார் மருந்தகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் ஒருவரும் அடங்குவர். மருந்தகத்தில் பணிபுரியும் அந்த 51 வயது பெண்மணி இருமுறை கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டிபிஎஸ் வங்கியின் முதலீட்டுப் பிரிவில் பணியாற்றும் ஒருவருக்கும் வெஸ்ட்கேட்டில் உள்ள மை ஃபர்ஸ்ட் ஸ்கூல் பாலர் பள்ளிக்குச் செல்லும் 2 வயது சிறுவனுக்கும் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மத்திய கல்லூரியில் பயிலும் 18 வயது மாணவருக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது. டிலிவரூ, கிராப் உணவு விநியோக ஓட்டுநராகப் பணியுரியும் 40 வயது ஆடவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் இரண்டு முறை கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்.

