கொவிட்-19 பரிசோதனை நடத்த
ஆறு நிறுவனங்களுக்கு அனுமதி
வட்டார மருத்துவப் பரிசோதனை மையங்களிலும் தங்குவிடுதிகளிலும் கொவிட்-19 மருத்துவப் பரிசோதனையை நடத்தும் ஆறு நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் அதிக கொரோனா மருத்துவப் பரிசோதனைகளை நடத்தும் முயற்சியில் சிங்கப்பூர் தீவிரமாக இறங்கியுள்ளது. அதற்காக தனியார் துறையின் உதவி நாடப்பட்டுள்ளது.
ராஃபிள்ஸ் மருத்துவக் குழுமம், எம்எச்சி மருத்துவக் கட்டமைப்பு, மின்மெட் குழுமம், கியூ அண்ட் எம் பல்மருத்துவக் குழுமத்தின் துணை நிறுவனமான அக்கியூமன் டயக்னோஸ்டிக்ஸ், ஹெல்த்வே மருத்துவக் குழுமம், ஃபுல்லர்ட்டன் சுகாதாரப் பராமரிப்புக் குழுமம் ஆகிய ஆறு சுகாதாரப் பராமரிப்பு நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிறுவனங்கள் சுங்கை தெங்கா விடுதி, துவாஸ் வியூ, இரண்டு வட்டார மருத்துவப் பரிசோதனை மையங்கள், பழைய சிக்லாப் உயர்நிலைப்பள்ளி, சாங்கியில் இருக்கும் சிவில் சர்வீஸ் கிளப் உட்பட ஏழு இடங்களில் கொவிட்-19 மருத்துவப் பரிசோதனைகளை நடத்த இருக்கின்றன.
கடுமையான கட்டுப்பாடுகளை தடுப்பூசி இதுவரை தடுத்துள்ளது
சிங்கப்பூரில் முழுவீச்சுடன் நடத்தப்பட்டு வரும் கொவிட்-19 தடுப்பூசி போடும் திட்டம் காரணமாகக் கிருமிப் பரவலை முறியடிக்கும் திட்டம் இரண்டாவது முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை இதுவரை தடுக்க முடிந்துள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தடுப்பூசி மட்டும் இல்லையென்றால் சிங்கப்பூரில் கிருமிப் பரவலை முறியடிக்கும் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் யோங் யோ லின் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த தொற்றுநோய் நிபுணரான பேராசிரியர் டேல் ஃபிஷர் தெரிவித்தார்.
சிங்கப்பூர் மக்கள்தொகையில் இதுவரை 30 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். முதல்முறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் இதில் அடங்குவர்.
இந்நிலையில், கிருமிப் பரவலை முறியடிக்கும் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டால் நிலைமையை மறுஆய்வு செய்யவும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களின் பணிச் சுமையைக் குறைக்கவும் உதவும் என்று என்யுஎஸ்ஸின் பேராசிரியர் டியோ யிக் யிங் கூறினார்.

