வீட்டிலிருந்து கற்றல் திட்டத்துக்கு மாணவர்களும் பள்ளிகளும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மேம்பட்ட ஆயத்த நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வீட்டிலிருந்தபடியே கல்வி பயிலும் முறை கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டிருந்தாலும் கடந்த ஆண்டின் அனுபவங்களைக் கவனத்தில் கொண்டு இம்முறை குறுகிய காலத்துக்குள்ளாகவே அதனை செயல்படுத்த முடிந்தது என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பள்ளி முதல்வர்கள் சிலர் குறிப்பிட்டனர்.
வீட்டிலிருந்தபடி கற்றல் முறையை கடந்த மாதம் 16 முதல் இம்மாதம் 12ஆம் தேதிக்கு உட்பட்ட காலகட்டத்திலும் நடைமுறைப்படுத்தி பயிற்சி பெற்றிருந்ததாக ஹில்குரோவ் உயர்நிலைப் பள்ளியின் முதல்வர் ஏஞ்சலின் சான் குறிப்பிட்டார்.
உதவி தேவைப்படும் சில பிள்ளைகள் அடையாளம் காணப்பட்டு அவர்களைப் பள்ளிக்கு வரவழைத்து கூடுதல் கண்காணிப்புடன் இந்தக் காலகட்டத்தில் பாடம் நடத்தப்படும் என்றார் அவர்.
வீட்டிலிருந்தபடி கற்கும் மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளில் விருப்பமுடன் ஈடுபடுவதை ஊக்கு விக்கும் விதத்தில் அவர்களுக்கு உடற்பயிற்சி கல்வி, கலை மற்றும் இசை, இணையம் வழி இணைப்பாட நடவடிக்கைகள் போன்றவையும் நடைமுறைப்படுத்தப்படும் என்று ராடின் மாஸ் தொடக்கப்பள்ளியின் முதல்வர் முகம்மது ஃபரிஸால் உமர் எஃபெண்டி குறிப்பிட்டார்.
முதல் நாளில் மாணவர்களுக்கு ஏற்பட்ட சிரமம்
வீட்டிலிருந்தபடியே கல்வி பயிலும் முறை தொடங்கிய முதல் நாளான நேற்று காலை, கற்றல் வளங்களைக் கொண்டிருக்கும் 'மாணவர் கற்றல் தளம்' இணையத்தளத்தைப் பயன்படுத்துவதில் சில மாணவர்கள் சிரமத்தை எதிர்கொண்டனர்.
தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக்கல்லூரிகள், மில்லேனியா கல்விக் கழகம், சிறப்புக் கல்விப் பள்ளிகள் என அனைத்துப் பள்ளி மாணவர்களும் வீட்டிலிருந்தபடியே கல்வி கற்கும் முறை தொடங்கியுள்ள நிலையில் மாணவர் கற்றல் தளத்தின் பயன்பாடு மெதுவடைந்தது தெரியும் என கல்வி அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
"அதனைத் தொடர்ந்து கூடுதல் கணினி வளங்களைச் செயல்படுத்திய பிறகு காலை 9.30 மணியளவில் தளம் பழையபடி பயன்பாட்டுக்கு வந்தது," என அறிக்கை குறிப்பிட்டது.
நேற்று முதல் பள்ளிகளில் இந்தத் தவணைக்காலம் நிறைவுறும் நாளான, இம்மாதம் 28ஆம் தேதி வரை மாணவர்கள் வீட்டிலிருந்த படியே கல்வி கற்பார்கள்.
ஆசிரியர்களுக்கும் மாணவர்
களுக்கும் இடையூற்றைக் குறைக்கும் நோக்கில் கற்றல் கட்டமைப்பின் செயல்பாட்டை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.
கற்றல் இணையத் தளத்துக்குள் நுழைய தொடர்ந்து முயற்சி செய்ததாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வீட்டிலிருந்தபடி கல்வி பயிலும் நிலை ஏற்பட்டபோதும் இந்தக் கற்றல் இணையத் தளப் பயன்பாட்டில் இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தன. அதிகமானோர் அந்தத் தளத்தைப் பயன்படுத்துவதற்கு ஏதுவான மாற்றங்களைச் செய்து உடனடியாக பிரச்சினை சரிசெய்யப்பட்டது என்று கல்வி அமைச்சு அப்போது குறிப்பிட்டது.
தேவைப்படுவோருக்கு உதவி
காத்திருக்கிறது
வீட்டிலிருந்தபடி கல்வி பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி, இலவச உணவு போன்றவற்றின் தேவை அதிகரிக்கக்கூடும் என உதவி வழங்கும் அமைப்புகள் எதிர்பார்க்கின்றன.
பள்ளிகளிலிருந்து சில மாணவர்கள் தங்களுக்குத் தேவையான சாதனங்களைக் கடனாகப் பெற்றுள்ளனர்.
வீட்டிலிருந்து கல்வி பயிலும் காலகட்டத்தில் உணர்வுபூர்வமான ஆதரவு தேவைப்படுவோருக்கு உதவி நல்கவும் பள்ளிகள் தயாராக உள்ளன.
எளிதில் பாதிக்கப்படும் குழுக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்
படுவது முக்கியம் என நேற்று அதிபர் ஹலிமா யாக்கோப் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
"இந்தச் சவாலான காலகட்டத்தில் சிரமமான பின்னணிகளைக் கொண்ட பிள்ளைகள் பின் தங்கிவிடாமல் இருக்க உதவும் பொருட்டு அதிகமான சமுதாய சேவை முகவைகள் அதிபர் சவால் திட்டத்தை வலுப்படுத்த வேண்டும்," என்றும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

