உள்துறைக் குழுவின் பணிகளில் நம்பிக்கைதான் 'அடிப்படை நாணயம்' என உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நேற்று கூறினார்.
பொதுமக்கள் கண்ணோட்டக் கருத்தாய்வு 2021ல் பங்கேற்றவர்களில் 91 விழுக்காட்டினர் உள்துறைக் குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் தங்களது பணியை நேர்மை, சார்பின்மை போன்ற பண்புகளுடன் நிபுணத்துவத்துவ முறையில் மேற்கொள்வதாகக் குறிப்பிட்டனர். அவர்கள் தங்கள் பணியைத் திறம்பட செய்து சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்திருக்கின்றனர் என ஆய்வில் பங்கேற்றவர்களில் 92 விழுக்காட்டினர் குறிப்பிட்டுள்ளனர்.
"பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவது என்பது பிரபலமான முடிவுகளை எடுப்பது என்பதல்ல. பலதரப்பட்ட மக்களுக்கு நன்மைபயக்கக்கூடிய கடினமான முடிவுகளை எடுக்கத் தயாராக இருப்பதையே அது குறிக்கும்," என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு வழங்கும் மெய்நிகர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது அமைச்சர் இவற்றைக் குறிப்பிட்டார்.
பதவி உயர்வு பெற்றவர்களில் 4,063 பேர் உள்துறைக் குழுவின் துறைகளில் முழுநேர அதிகாரிகளாகப் பணிபுரிபவர்கள்.
மேலும் 2,096 பேர் சிங்கப்பூர் போலிஸ் படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த தேசிய சேவையாளர்கள். எஞ்சிய 121 பேர் தொண்டூழியர் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.
வலுவான தலைமைத்துவம், பொதுமக்கள் நம்பிக்கை, வலுவான வேலையிட கலாசாரத்தை உருவாக்குவது, வலுவான தலைவர்களை உருவாக்குவது போன்றவற்றின் முக்கியத்துவம் பற்றியும் அவர் பேசினார்.
கொரோனா தொற்றுக் காலமான கடந்த ஆண்டில் உள்துறைக் குழு சிறப்பாகச் செயல்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், வரும் 2025ஆம் ஆண்டுக்குள் தொழில்நுட்பத்துடன் குறிப்பிடத்தக்க அளவுக்கு உள்துறைக் குழு உருமாற்றம் பெறும் என்றார்.

