போதைப்பொருள் தொடர்பான குற்றவாளி என சந்தேகிக்கபப்டும் பெண் ஒருவர் தம்மிடம் இரண்டு பொட்டலம் ஹெராயின் போதைப்பொருளைக் கொடுத்தார் என மலேசிய பேருந்து ஓட்டுநர் ஒருவரை அடையாளம் காட்டினார். ஆனால் அந்த ஓட்டுநர் குற்றமற்றவர் என உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்ததையடுத்து அவர் மரண தண்டனையிலிருந்து தப்பினார்.
கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதி சிங்கப்பூருக்கு பேருந்து ஓட்டி வந்த மங்கலகிரி துருவ குமார், 50 எனும் அந்த ஆடவர் சாந்தி கிருஷ்ணன் எனும் பெண்ணிடம் ஹெராயின் போதைப்பொருள் இருந்த பையைக் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
அவர் போதைப்பொருளைக் கொடுத்தார் என்பதற்கான சான்றாக சாந்தியின் வாக்குமூலம் மட்டுமே இருப்பதாக நீதிபதி வேலரி தியன் தனது தீர்ப்பில் எழுதியிருந்தார். ஆனால், சாந்தியின் வாக்குமூலச் சான்று நம்பக்கூடியதாக இல்லை என்றும் நீதிபதி முடிவு செய்தார்.
அப்போது நடந்தவைகளை சாந்தியால் முழுமையாக நினைவுகூர முடியவில்லை என்று நீதிபதி தியன் குறிப்பிட்டார். கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் கைதான பிறகு போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளிடம் கூறியதற்கும் நீதிமன்றத்தில் சாந்தி கூறியதற்கும் மிகுந்த வேறுபாடு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
சாந்தி, மங்கலகிரி ஆகிய இருவரிடையே கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 19, மே 16 தேதிகளில் ஆறு முறை நிகழ்ந்த தொலைபேசி உரையாடல்கள் தொடர்பான ஆதாரங்களை அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் சமர்ப்பித்தனர்.
ஆனால், சாந்தி , மங்கலகிரி ஆகிய இருவரும் ஒருவருக்கு ஒருவர் பரிச்சயமானவர்கள் என்பதை மட்டுமே இந்த ஆதாரங்கள் காட்டுவதாகத் தெரிவித்தார். சாந்தி கைதான பிறகு அடையளம் கண்டறியப்படாத ஒருவருடன் மங்கலகிரி சந்தேகத்துக்கு உரிய வகையில் பலமுறை தொலைபேசி வழி பேசியதையும் அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினர். அவ்வாறு நெடுநேரம் பேசிய நபர் யார் என்பது தமக்குத் தெரியாது என மங்கலகிரி குறிப்பிட்டதை நம்புவது கடினம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
ஆனால், மங்கலகிரி சாந்தியிடம் போதைப்பொருள் வழங்கினார் என்பதை நிரூபிக்க சூழ்நிலைச் சான்றுகள் போதுமானதாக இல்லை என்று நீதிபதி கூறினார்.
"என்னுடைய தீர்ப்பின்படி, மங்கலகிரி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமில்லாதபடி நிரூபிக்கப்படவில்லை," என்று நீதிபதி தியன் குறிப்பிட்டார்.
கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதி அங் மோ கியோ ஸ்திரீட் 61ல் சாந்தியை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் $8,200 ரொக்கம் இருந்தது. அவர் போதைப்பொருளைக் கொடுத்த ஸைனுதீன் முகம்மது என்பவரையும் போலிசார் கைது செய்தனர்.
ஸைனுதீனின் வீட்டு குப்பைத் தொட்டியிலிருந்து 22.73 கிராம் ஹெராயின் போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றினர். சாந்தி, ஸைனுதீன் ஆகியோர் மீதான குற்றம் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பரில் நிரூபிக்கப்பட்டது. சாந்தி ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். ஸைனுதீனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

