செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
a5a63aeb-d707-471c-b693-6816e7a3aa03
-

பெரும்பாலான பிரிவுகளில் சிஓஇ கட்டணம் குறைந்தது

மோட்டார்சைக்கிள்களைத் தவிர மற்ற பிரிவுகளுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் (சிஓஇ) குறைந்து காணப்பட்டன. 1,600சிசி அளவிலான சிறிய ரக கார்களுக்கான சிஓஇ $48,002லிருந்து $41,801ஆகக் குறைந்தது. 1,600சிசிக்கு மேற்பட்ட பெரிய ரக கார்களுக்கான சிஓஇ $60,001லிருந்து $58,089ஆகக் குறைந்தது. மோட்டார்சைக்கிள்கள் தவிர மற்ற வாகனங்களுக்கான சிஓஇ $63,002லிருந்து குறைந்து $62,000 ஆனது. வர்த்தகப் பிரிவு வாகனங்களுக்கான சிஓஇ $43,001லிருந்து குறைந்து $41,701 ஆனது. ஆனால், மோட்டார்சைக்கிள்களுக்கான சிஓஇ கட்டணம் $8,011லிருந்து $8,701ஆக அதிகரித்தது.

கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி ஓட்டுநர்களுக்கு 50% வாடகை

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளால், ஓட்டுநர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் நோக்கில், இம்மாதம் 18ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 13ஆம் தேதி வரை ஓட்டுநர்கள் வழக்கமாகச் செலுத்தும் வாடகையில் 50% மட்டும் செலுத்தினால் போதும் என கம்ஃபர்ட்டெல்குரோ தெரிவித்துள்ளது.

புதிய கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்த பிறகு வருமானம் குறைந்திருப்பதாக டாக்சி, தனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள் தெரிவித்தனர். இந்தக் கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கும் காலத்தில் டாக்சிகளுக்கான தேவை குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறையும் என எதிர்பார்ப்பதாக கம்ஃபர்ட்டெல்குரோ குழுமத்தைச் சேர்ந்த அதிகாரி டாம்மி டான் குறிப்பிட்டார்.

அதனால் தினசரி வாடகைக் கழிவை முன்பிருந்த 20 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். டாக்சி ஓட்டுநர்களுக்கு மேலும் உதவும் விதத்தில் அவர்கள் செலுத்தும் அழைப்புத் தீர்வைகளுக்கு அடுத்த மாதம் 30ஆம் தேதி வரை விலக்கு அளிப்பதாகவும் திருவாட்டி டான் குறிப்பிட்டார்.

கம்போடியாவிலும் செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது புரோப்நெக்ஸ்

சொத்துச்சந்தை நிறுவனமான புரோப்நெக்ஸ் கம்போடியாவிலும் செயல்பாட்டைத் தொடங்கி இருப்பதாக நேற்று அறிவித்தது. அங்கு மேம்பாட்டாளர்களுடன் இணைந்து இரண்டு மேம்பாட்டுத் திட்டப்பணிகளில் ஈடுபடுவதாகவும் அது குறிப்பிட்டது. சிங்கப்பூர் தவிர இந்தோனீசியா, மலேசியா, வியட்நாம், கம்போடியா ஆகிய நாடுகளிலும் தங்களது செயல்பாட்டைக் கொண்டிருக்கும் புரோப்நெக்ஸ் நிறுவனத்தில் 12,000 முகவர்கள் இருக்கின்றனர். 'புரோப்நெக்ஸ் கம்போடியா' நிறுவனத்தை திரு ஆலன் நியோ தலைமை நிர்வாக அதிகாரியாக வழிநடத்துவார். கிட்டத்தட்ட 500 முகவர்களைக் கொண்டிருக்கும் அந்த நிறுவனத்தின் தலைமையகம் புநோம்பென்னில் அமைகிறது. சியம் ரீப், சிஹானுக்வில் ஆகிய இடங்களில் கிளைகள் செயல்படும்.

ஹாங்காங் சொத்து மேம்பாட்டு நிறுவனமான அர்பன் ஹப் (கம்போடியா) நிறுவனத்துடன் இணைந்து புநோம்பென்னில் 760,000 சதுரமீட்டர் பரப்பளவிலான 'அர்பன் வில்லேஜ்' எனும் திட்டப்பணியிலும், ஹோங் லாய் ஹுவாட் குழுமத்தால் உருவாக்கப்படும் ட்'சீவியூ எனும் திட்டப்பணியிலும் புரோப்நெக்ஸ் கம்போடியா நிறுவனம் இணைந்து செயல்படுகிறது.

ஹாலோவின் நிகழ்ச்சி: உணவக உரிமையாளருக்கு $14,000 அபராதம்

'ஹாலோவின்' கருப்பொருளைக் கொண்ட நிகழ்ச்சி ஒன்றைக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஏற்பாடு செய்த கெம்மா ஸ்டீக்ஹவுஸ் கடையின் உரிமம் பெற்றவருக்கு $14,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் 75 பேர் கலந்துகொண்டனர். கெம்மா ஸ்டீக்ஹவுஸ் நேஷனல் கேலரியில் அமைந்துள்ளது. சிங்கப்பூரில் கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டின் இரண்டாம் நிலை நடப்பில் இருந்தபோது இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதிக எண்ணிக்கையிலானோரைப் பதிவு செய்ய அனுமதித்ததுடன் வாடிக்கையாளர் குழுக்கள் கலந்துறவாடுவதைத் தடுக்க அந்த உணவகம் தவறிவிட்டதால் நேற்று அபராதம் விதிக்கப்பட்டது. தனியார் உறுப்பினர்களைக் கொண்ட மன்றம் ஒன்றுடன் இணைந்து அந்த உணவகம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது விசாரணையில் தெரியவந்ததாக சிங்கப்பூர் உணவு வாரியத்தின் அறிக்கை தெரிவித்தது. நிகழ்ச்சியில் உணவு மேசைக்கு ஐவர் என்ற விகிதத்தில் இருந்தாலும் பல சமயங்களில் குழுக்களுக்கிடையே கலந்துறவாடியது கண்காணிப்பு கேமரா பதிவுகளில் கண்டுபிடிக்கப்பட்டது.