சிங்கப்பூரில் பசுமைத் தொழில் துறையை மேம்படுத்துவதற்காக புதிய கட்டமைப்பும் நிறுவனங்கள் பருவநிலை தொடர்பான தகவல்களைத் தெரிவிப்பதற்கு புதிய வழிகாட்டியும் நேற்று வெளியிடப் பட்டுள்ளன.
சிங்கப்பூர் நாணய ஆணையம் அமைத்த பசுமை நிதித் தொழில்துறை பணிக்குழு, பருவநிலை மாற்றம் பற்றிய தகவல்களைத் தெரிவிப்பதற்கும் பசுமை வர்த்தக நிதிக்கான கட்டமைப்பையும் மேம்படுத்தும் நோக்கில் இந்த வழிகாட்டியை வெளியிட்டுள்ளது.
பணிக்குழுவின் இந்த முயற்சி, சிங்கப்பூரில் கரியமிலவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் தொழில்துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு உதவும் என்றும் பசுமை நிதித்துறையை மேம் படுத்த வழிவகுக்கும் என்றும் ஆணையம் நேற்று அதன் அறிக்கையில் தெரிவித்தது.
பசுமை வர்த்தகம் மற்றும் பணி முதலீட்டிற்கான பணிக்குழுவின் புதிய கட்டமைப்பு, பசுமையைக் கட்டிக்காக்கும் வகையில் உற்பத்தி மற்றும் தொழிலில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு உதவுவதற்கு கொள்கை ரீதியிலான அடித்தளத்தை ஏற்படுத்தவும் பசுமை வர்த்தகப் பரிவர்த்தனைகளை மதிப்பீடு செய்து சான்றிதழ் வழங்கவும் பணிக்குழுவின் இந்த முன்னெடுப்பு வங்கிகளுக்கு உதவும் என்று ஆணையம் கூறியது.
பணிக்குழுவின் புதிய கட்டமைப்பு மற்றும் வழிகாட்டி நெறிமுறைகள் மூலம், எரிசக்தி, மறுசுழற்சி, தோட்ட நடவடிக்கைகள் ஆகிய நான்கு பசுமைப் பரிவர்த்தனைகளை முன்னோட்டமாக செயல்படுத்தி எச்எஸ்பிசி, யுஓபி ஆகிய வங்கிகள் பசுமைத் தொழில் துறை வர்த்தகங்களுக்கு ஆதரவு அளித்துள்ளன.
கரியமிலவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் உற்பத்தி மற்றும் தொழில்துறைகளை மேம்படுத்தும் நடவடிக்கையை பணிக்குழுவின் முன்னெடுப்பு விரைவுபடுத்தும் என்றார் ஆணையத்தின் துணை நிர்வாக இயக்குநர் ஜில்லியன் டான். பருவநிலை மாற்றம் தொடர்பான வெளிப்பாடுகளில் அதிக நிலைத்தன்மையையும் ஒப்பீட்டையும் எட்டுவதற்கான அனைத்துலக முயற்சிகளுக்கும் இது பங்களிக்கும் என்றார்.

