கொவிட்-19 சூழலிலிருந்து சிங்கப்பூர் மீண்டுவருவது தொடர்பில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்
கொவிட்-19 கொள்ளைநோயைக் கட்டுப்படுத்த சிங்கப்பூர் உட்பட உலக நாடுகள் பல முயன்று வருகின்றன. ஆனால் இது நீண்ட, நிச்சயமற்ற ஒரு போர் என்பதை அனைத்து நாடுகளும் நினைவில் கொள்ள வேண்டும்.
"உண்மையில், அதிக வீரியமுள்ள கிருமியுடன் நாம் போராடுகிறோம். நம் தற்காப்பில் ஒரு குறைபாடு இருந்தால்கூட, கிருமி உள்ளே புகுந்து அதிவேகமாகப் பெருகிவிடுகிறது," என்றார் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்.
'ஆசியாவின் எதிர்காலம்' தொடர்பில் இணையம் வாயிலாக நடைபெற்ற 26வது அனைத்துலக மாநாட்டில் நேற்று காலை பேசிய திரு ஹெங், உடனே எதிர்கொள்ள வேண்டிய சவால் என்ன என்பதையும் விளக்கினார். கொவிட்-19 கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவது, பொருளியலில் ஏற்படக்கூடிய நீடித்த பாதிப்பைத் தவிர்ப்பது ஆகியவையே அவை என்றார்.
கடந்த ஆண்டு கொவிட்-19 ஆதரவு தொடர்பான ஐந்து வரவுசெலவுத் திட்டங்களுக்காக அரசாங்கம் கிட்டத்தட்ட 100 பில்லியன் வெள்ளியை ஒதுக்கியது. இந்தத் தொகை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20% ஆகும்.
இத்தகைய விரிவான ஆதரவை நல்கியதன் காரணத்தையும் திரு ஹெங் பகிர்ந்துகொண்டார்.
"நிறுவனங்களை மூடினாலோ ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தாலோ நிலைமை மேம்பட்டாலும் மீண்டுவரும் பயணம் கடினமானதாக இருக்கும். அதனால் அந்த ஆற்றலைத் தக்கவைத்துக்கொள்வது மிக முக்கியம்," என்றார்.
அதே சமயம் மின்னிலக்கமயமாதல் முதல் நீடித்த நிலைத்தன்மை வரையில் கொவிட்-19 பல்வேறு மாற்றங்களைத் துரிதப்படுத்தியதையும் அவர் சுட்டினார்.
இதற்காகவே, எதிர்காலப் பொருளியல் மன்றத்தின் கீழ் தொழில்துறை உருமாற்ற வரைவுத் திட்டங்கள் 2016ல் தொடங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். உற்பத்தி, கட்டடச் சூழல், வர்த்தகம் மற்றும் இணைப்புத்தன்மை, அத்தியாவசிய உள்நாட்டுச் சேவைகள் என மொத்தம் 23 தொழில்துறைகள் உருமாறுவதற்கான வருங்காலத் திட்டங்களே இவை. கொவிட்-19க்குப் பிந்திய உலகில் புது வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள, இந்த வரைவுத் திட்டங்கள் மீண்டும் புதுவடிவம் காணும். மேலும் வலிமை பெற்று எழுவதற்கான பணிக்குழு முன்வைக்கும் பரிந்துரைகளைச் சேர்த்துக்கொள்வதுடன் ஆராய்ச்சி, புத்தாக்கம் ஆகிய அம்சங்கள் வரைவுத் திட்டங்களில் மேலும் நன்கு ஒருங்கிணைக்கப்படும். அத்துடன் வேலைகள், திறன்கள் ஆகியவற்றிலும் புதிய வரைவுத் திட்டங்கள் கவனம் செலுத்தும்.
"பல பொருளியல் நடவடிக்கைகள் நடந்தேறும் விதம் தொடர்பான விதிமுறைகளை கொவிட்-19 மாற்றிவிட்டது. மேலும் வலிமை பெற்று எழுவதற்கான பணிக்குழு தந்துள்ள அறிக்கையைக் கொண்டு நம் திட்டங்களில் அதை இணைப்பேன்," என்றார் துணைப் பிரதமர் ஹெங்.
அமெரிக்க, சீன உறவில் உலகின் கவனம் இருந்தாலும் சிங்கப்பூர் அதன் பங்காளிகளுடன் கொண்டுள்ள நல்லுறவு அதையும் தாண்டியது என்றார் திரு ஹெங். பயன்மிக்க போட்டித்தன்மையால் புத்தாக்கம் வளர்வதுடன் புதுத் தீர்வுகளும் பிறக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.
"அனைத்துலக உறவுகள் எனும் நிலையில் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு திறந்த அணுகுமுறையை நாம் கடைப்பிடிப்போம் என்பதே என் விருப்பம்," என்றார் அவர்.
அனைத்துலக ஒத்துழைப்பு,
திடமான உலக ஒழுங்கு அவசியம்
இந்நிலையில், அனைத்துலக ஒத்துழைப்பை வலுபடுத்திக்கொள்ளாவிடில் உலகநாடுகள் தீரா தொற்று அலைகளில் சிக்கிக்கொள்ளும் என்றார் திரு ஹெங். திடமான அனைத்துலக ஒழுங்குமுறை இருந்தால் மட்டுமே இந்த ஒத்துழைப்பு சாத்தியம் என்றார் அவர்.
வல்லரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதும் செல்வாக்கு தொடர்பில் போட்டி ஏற்படுவதும் வழக்கமானது என்று குறிப்பிட்ட திரு ஹெங், அந்தப் போட்டி ஆக்கபூர்வமான முறையில் நடப்பதுடன் நம்பிக்கையை வளர்ப்பதாகவும் அமைய வேண்டும் என்றார். இது பதற்றநிலையைப் போக்குவதுடன் ஒத்துழைக்க மறுத்து அது பின்னாளில் ஆயுதம் ஏந்திய மோதலில் முடியாமல் இருப்பதையும் தவிர்க்கும் என்றார்.

