செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
a4c496f2-bb71-4be9-83b0-4b50d06c3113
-

கொவிட்-19 பரிசோதனைக்காக நீண்ட வரிசைகள் உருவாகின

ஒரு சில கடைத்தொகுதிகளுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றிருந்ததைத் தொடர்ந்து, அதே நேரத்தில் அவ்விடங்களில் இருந்த மற்றவர்களும் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ளுமாறு குறுந்தகவல் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து வெவ்வேறு பரிசோதனை மையங்களிலும் மருந்தகங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை நேற்று முன்தினம் ஏற்பட்டது. சிலர் இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்ததாகவும் சிலர் பரிசோதனைக்கு மறுநாள் வருமாறு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. வழக்கமாகச் செய்யும் பரிசோதனைகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் பரிசோதனை மாதிரிகள் சேகரித்ததாக ஒரு சில மருந்தகங்கள் தெரிவித்தன.

அனைத்து உள்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் பரிசோதனை

உள்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதை அடுத்து, முன்னெச்சரிக்கையாக அனைத்து அதிகாரிகளுக்கும் இவ்வாரம் கொவிட்-19 பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கொவிட்-19 கிருமியால் பாதிக்கப்பட்ட அந்த அதிகாரி, கடந்த வெள்ளிக்கிழமையன்று பணியிடத்தில் இருந்ததாகவும் அவர் இரு வெவ்வேறு வேலை நேரங்களில் அங்கு இருந்ததாகவும் கூறப்பட்டது.