சிங்கப்பூரில் ஜூன் 4, 5ஆம் தேதிகளில் நடைபெறுவதாக திட்டமிடப் பட்டிருந்த ஷங்ரிலா கலந்துரையாடல், கொவிட்-19 சூழல் கருதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் நேற்று அறிவித்தனர். இந்நிகழ்வு ரத்து செய்யப்பட்டது, வருத்தம் அளிப்பதாக அனைத்துலக உத்திபூர்வ ஆய்வுக் கழகத்தின் பேச்சாளர் கூறியிருந்தார்.
ஷங்ரிலா ஹோட்டலில் வருகையாளர்கள் நேரடியாக கலந்துகொள்ளவிருக்கும் நிகழ்வாக ஷங்ரிலா கலந்துரையாடல் இருக்கும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. புதிய உருமாறிய கொவிட் கிருமியால் தொற்று அதிகரித்து, உலகளவில் கொவிட்-19 நிலவரம் அண்மைய காலமாக மோசமடைந்துள்ளதைக் குறிப்பிட்ட பேச்சாளர், சிங்கப்பூரின் சூழ்நிலையையும் சுட்டினார். சமூகத் தொற்றில் அதிகரிப்பு, புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம், கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும் சாத்தியம் இவை அனைத்தும் ஒரு நிச்சயமற்ற சூழலையே குறிக்கிறது என்றார் அந்தப் பேச்சாளர். நிகழ்வை ரத்து செய்யும் முடிவைத் தற்காப்பு அமைச்சு ஆதரித்துள்ளது. இது தமக்கு வருத்தம் அளித்தாலும் ரத்து செய்வதே பொறுப்பான முடிவு, பாதுகாப்பானது என்றார் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்.

