ஆங்கிலோ-சீனப் பள்ளியில் (ஜூனியர்) தொடக்கநிலை ஆறு மாணவர் ஒருவருக்கு கொவிட்-19 இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், மாணவருடன் அணுக்கமான தொடர்பில் இருந்த அவரின் வகுப்பு நண்பர்களும் தனிமைப்படுத்தப்படுவர் என்று அறியப்படுகிறது.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்பில் இருந்த அந்த மாணவர், கடைசியாக திங்கட்கிழமையன்று பள்ளிக்குச் சென்றிருந்தார்.
மாணவரின் வகுப்பு நண்பர்களின் பெற்றோருடன் சுகாதார அமைச்சு தொடர்புகொண்டு அவர்களுடைய பிள்ளைகள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தங்களின் பிள்ளைகளுடன் பெற்றோர்களும் செல்வர் என்றும் அவர்கள் ஹோட்டல் ஒன்றுக்குக் கொண்டு செல்லப்படக் காத்திருந்தார்கள் என்றும் நேற்றைய நிலவரத்தில் கூறப்பட்டது.
பெயர் குறிப்பிட விரும்பாத பெற்றோர் பகிர்ந்துகொண்ட தகவலின்படி, அக்குறிப்பிட்ட வகுப்பில் 31 மாணவர்கள் உள்ளனர் என்று கூறப்படுகிறது.
தமக்கு வழங்கப்பட்ட கடிதம் ஒன்றில், தம்முடைய மகன் திங்கட்கிழமை தொடங்கி மே 31 வரை கட்டாய விடுப்பில் இருக்க வேண்டும் என்றும் அந்தக் காலத்தில் வீட்டிலேயே முடிந்த வரை இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது. திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை இரு தினங்களிலும் ஆண்டிடைத் தேர்வு காரணமாக தம் மகன் பள்ளிக்குச் சென்றதாக அந்த பெற்றோர் கூறினார்.
இதற்கிடையே, பள்ளி வளாகத்தைச் சுத்தம் செய்யும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டது என்று பள்ளி தெரிவித்துள்ளது. கிருமியால் பாதிக்கப்பட்ட மாணவருடன் தொடர்பில் இருந்த ஆசிரியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

