பிள்ளைகள் அடுத்த ஆண்டு தொடக்கநிலை ஒன்றில் சேர்வதற்கான பதிவு வரும் ஜூன் 30ம் தேதி தொடங்கும். கொவிட்-19 கிருமிப் பரவலால் இந்த ஆண்டும் பதிவு இணையம் வழியாக நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடக்கப் பள்ளி முதல் வகுப்புக்கு பதியும் நடைமுறையை கல்வி அமைச்சு தற்போது மறுஆய்வு செய்து வருகிறது. அந்த மறுஆய்வால், இவ்வாண்டுக்கான பதிவில் மாற்றம் இருக்காது என்று அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
அந்த மறுஆய்வில், பொதுப் பிரிவான கட்டம் 2சியில் எவ்வாறு அதிக இடங்களை ஒதுக்கலாம் என்று கல்வி அமைச்சு ஆராய்கிறது.
பள்ளிகளில் சேர்வதற்கு எவ்வித முன்னுரிமையும் இல்லாமல், வீட்டுக்கும் பள்ளிக்கும் இடையிலான தூரத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கு பள்ளிகளில் இடம் கிடைக்கும் பிரிவு அது.
மேலும், சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தொடக்கநிலை முதல் வகுப்புக்கான பதிவு முழுமையாக இணையத்தின் வழி நடைபெறுகிறது.
பிள்ளைகள் எந்த கட்டத்தின் கீழ் வருவார்கள் என்பதைப் பொருத்து இரண்டு வழிகளில் பெற்றோர் அவர்களைப் பள்ளியில் சேர்க்க பதியலாம்.
முதல் கட்டத்தில் இணைய விண்ணப்பப் படிவம் வழியாக பிள்ளைகளை எவ்வாறு பதிவது என்று பள்ளிகளே பெற்றோருக்கு மேல்விவரம் தெரிவிக்கும். அது, ஏற்கெனவே ஒரு பிள்ளை படித்துக்கொண்டிருக்கும் பள்ளியில், இளைய பிள்ளைகளை பதிவதற்கான பிரிவு. அத்துடன், தொடக்கநிலை ஒன்று பதிவு நடைமுறையைப் பற்றி தகவல்களைப் பெற, பெற்றோர் கல்வி அமைச்சின் பேரன்ட்ஸ் கேட்வே (Parents Gateway) செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.
தொடக்கநிலை 1 பதிவுக்குத் தேவையான அம்சங்கள், பள்ளி தொடங்கும் முன்னர் ஆயத்தமாக வேண்டியவை போன்றவை பற்றிய தகவல்களையும் அதில் பெறலாம்.

