சிங்கப்பூர் பயணிகளுக்கு மீண்டும் கட்டுப்பாடு விதித்தது புருணை
புருணை, சிங்கப்பூர் பயணிகள் தடையில்லாமல் செல்ல அனுமதிக்கும் இருதரப்பு ஏற்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது.
நேற்று இரவு 7 மணிக்கு அது நடப்புக்கு வந்தது. புருணையின் பிரதமர் அலுவலகம் கடந்த புதன்கிழமை அது குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தது.
புருணைக்குள் நுழைய முன்கூட்டியே அனுமதி பெற்றவர்கள் நேற்று இரவு ஏழு மணிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். இதற்குப் பிறகு சிங்கப்பூரிலிருந்து புருணைக்குச் செல்லும் எல்லா பயணிகளும் தங்களை ஹோட்டலில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். எவ்வளவு நாட்கள் தனிமையில் இருப்பது என்பதை புருணையின் சுகாதார அமைச்சு முடிவு செய்யும்.
புருணையின் இந்த நடவடிக்கையால், சிங்கப்பூர் மற்ற நாடுகளுடன் செய்துகொண்ட தடையற்ற பயண ஏற்பாடுகளில் ஒன்று மட்டுமே எஞ்சியுள்ளது. அது சீனாவுடனான பயண ஏற்பாடாகும்.
அவசியமான குறுகியகால வர்த்தகப் பயணங்களையும் அதிகாரத்துவப் பயணங்களையும் எளிதாக்குவதே அந்த ஏற்பாடுகளின் நோக்கம்.
'அமைதி வீரர்கள்' விருதுகளுக்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன
ஹில்வியூ சிவிலியன்ஸ் சங்கம் ஆண்டுதோறும் வழங்கி வரும் ' சிங்கப்பூர் அமைதி வீரர்கள் விருதுகள்' இந்த ஆண்டு எட்டாவது முறையாக வழங்கப்படவிருக்கின்றன.
2014ம் ஆண்டு முதல் இவ்விருதுகள் விளம்பரத்தையோ அங்கீகாரத்தையோ விரும்பாமல் சமூகத்துக்கு அமைதியாக பங்காற்றுவோருக்கு வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஏழு ஆண்டுகளில் மொத்தம் 38 பேர் இந்த விருதுகளைப் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்த விருதுகளுக்கு 91 பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றன.
இந்த ஆண்டு, பராமரிப்பு மற்றும் உடற்குறையுள்ளவர் களுக்கான 'மனிதாபிமான இதயங்கள்', 'நம்பிக்கை அளிக்கும் முன்னோடிகள்', 'தலைசிறந்த பெரியவர்', 'உற்சாகமூட்டும் இளையர்', 'பரிவுமிக்க வெளிநாட்டவர்' என 5 பிரிவுகளில் விருதுகளுக்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. வரும் ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பரிந்துரைகளை https://www.sgsilentheroes.com/ எனும் இணையத்தளம் மூலம் அனுப்பலாம்.
தமிழ் பட்டிமன்றக் கலைக்கழகத்தின்
அன்னையர் தின விழா 2021
இம்மாதம் 26ஆம் தேதி மாலை 6 மணியளவில் அருகு இணையதளம் வழியாக நடைபெறவிருக்கும் அன்னையர் தின நிகழ்ச்சிக்காக அன்னையர் திலகம் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. கிடைத்த விண்ணப் பங்களில் சிறந்த ஓர் அன்னைக்கு இந்த நிகழ்வில் 'அன்னையர் திலகம்' விருது வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சிக்காக மாணவர்களுக்கு இரு பிரிவுகளில் காணொளிப் போட்டியும் நடத்தப்பட்டது. காணொளிப் போட்டியில் வென்ற மாணவர்கள் இந்த நிகழ்வில் அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்புச் சேர்க்க அன்னையின் 'அன்பில் விஞ்சிநிற்க வேண்டியது கண்டிப்பா? சுதந்திரமா?' என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெறவிருக்கிறது. நிகழ்ச்சியின் நடுவர் முனைவர் திருமதி ரேவதி சுப்புலட்சுமி. 'கண்டிப்பே' என்ற அணியில் திருமதி கங்கா, திருமதி மஹ்ஜபீன் ஆகியோரும், 'சுதந்திரமே' என்ற அணியில் திருமதி சுவர்ணலதா, செல்வி கலைவாணி இளங்கோ ஆகியோரும் பேசவிருக்கிறார்கள். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் திருமதி இராஜலட்சுமி கண்ணப்பன்.
மேலும் தகவல்களுக்கு திருமதி நபிலா நஸ்ரின் (90268601), முனைவர் சையது நிசார் (85034204) ஆகியோரைத் தொடர்புகொள்ளலாம்.
கிருமித்தொற்று: ஜாலான் மாஸ் புத்தே 'கேஎஃப்சி' கிளை மூடப்பட்டது
ஜாலான் மாஸ் புத்தேயில் உள்ள 'கெண்டக்கி ஃபிரைட்
சிக்கன்' விரைவு உணவகத்தின் ஊழியருக்கு கிருமி தொற்றியதால் அக்கிளை வேறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது.
அந்த ஊழியர் கடைசியாக கடந்த திங்கள் அன்று உணவகக் கிளையில் பணியாற்றினார். அவருடன் தொடர்புள்ள ஊழியர்களுக்கு கிருமிப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர் என்று 'கேஎஃப்சி' தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

