டாக்சி, வாடகை கார் ஓட்டுநர்கள் இந்த வாரத்தில் இருந்து கூடுதலாக நாள்தோறும் அதிக பண உதவியைப் பெறுவார்கள். அரசாங்கம் இதற்காக $27 மில்லியன் ஒதுக்கி இருக்கிறது.
கொவிட்-19 சமூகத்தொற்று அதிகரிப்பதால் கட்டுப்பாடுகள் கடுமையாகி இருக்கின்றன. இதனால் வாடகை கார், டாக்சி ஓட்டுநர்களுக்கு வருவாய் மிகவும் குறைந்து இருக்கிறது.
இந்த நிலையில், அவர்களுக்கு உதவுவதற்காக ஜூன் மாத முடிவு வரை இந்தக் கூடுதல் பண ஆதரவு கிடைக்கவிருக்கிறது. மொத்தமாக பார்க்கையில், ஓட்டுநர்கள் ஒரு வாகனத்துக்கு ஒரு நாளுக்கு $25 பெறுவார்கள். இப்போது அவர்கள் $15 பெறுகிறார்கள்.
இதைக் கணக்கிட்டு பார்க்கும் போது ஜூன் மாத முடிவு வரை ஒரு வாகனத்துக்கு ஒரு மாதத்திற்கு $750 நிதி ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்.
இதனால் 16,000 டாக்சி ஓட்டுநர்களும் 40,000 தனியார் வாடகை கார் ஓட்டுநர்களும் பலன் அடைவார்கள் என்று இன்று போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இதனிடையே, இது பற்றி இன்று குறிப்பிட்ட நிலப் போக்குவரத்து ஆணையம், ஏற்கெனவே கொவிட்-19 வாகன ஓட்டுநர் நிவாரண நிதியில் $188 மில்லியன் போடப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையில் அந்தத் தொகை விநியோகிக்கப்பட்டு வருகிறது. இப்போது அந்த நிதியில் மேலும் தொகை சேர்க்கப்பட்டு இருக்கிறது என்று ஆணையம் தெரிவித்தது.
இதன் தொடர்பில் டாக்சி, வாடகை கார் நிறுவனங்களுடன் ஆணையம் சேர்ந்து செயல்படும்.
டாக்சி, வாடகை கார் ஓட்டுநர்களுக்கு இப்போது அவசர உதவி தேவை என்பதை ஆணையம் சுட்டியது. சிங்கப்பூரில் கொவிட்-19 சமூகத்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை முதல் கடுமையான கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்துள்ளன.
அதனையடுத்து டாக்சி, வாடகை கார் ஓட்டுநர்களின் வருவாய் கணிசமாகக் குறைந்துவிட்டது என்பது முதற்கட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. புதிய கட்டுப்பாடுகளின்படி டாக்சி, வாடகை கார் ஓட்டுவோர் ஒரு நேரத்தில் இரண்டே இரண்டு பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல முடியும்.
இது ஒருபுறம் இருக்க, பல்வேறு கல்வி நிலையங்களைச் சேர்ந்த மாணவர்கள், முழு நேரமாக வீட்டில் இருந்தே படிக்கிறார்கள். இதனால் டாக்சி, வாடகை கார்களுக்கான தேவை குறைந்து இருக்கிறது. கூடுதல் நிதி உதவிக்குத் தகுதி பெறும் அனைத்து ஓட்டுநர்களுக்கும் தானாகவே உதவித் தொகை அவர்களின் நிறுவனங்கள் மூலம் கிடைக்கும்.
இதனிடையே, இந்த உதவித் தொகையை ஜூன் மாதத்திற்கு அப்பாலும் மேலும் நீட்டிப்பது பற்றி அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய டாக்சி நிறுவனமான கம்பர்ட்டெல்குரோவ், டாக்சி ஓட்டுநர்களுக்கான தன்னுடைய அன்றாட வாடகைத் தள்ளுபடியை இந்த வார தொடக்கத்தில் 50 விழுக்காடாக உயர்த்தியது.
இதர டாக்சி நிறுவனங்களும் குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு ேமலும் $5 வாடகைத் தள்ளுபடி கொடுக்கப்போவதாக உறுதி கூறி இருக்கின்றன.
மொத்தத்தில் ஏறத்தாழ $28 மில்லியன் கூடுதல் டாக்சி வாடகைத் தள்ளுபடிகளைத் தரப்போவதாக டாக்சி நிறுவனங்கள் அறிவித்து இருக்கின்றன என்று ஆணையம் தெரிவித்தது.
இதேபோலவே, கிராப், கோஜெக் நிறுவனங்களும் ஓட்டுநர்களுக்கு தள்ளுபடிகள் மூலம் உதவிக்கரம் நீட்டி இருக்கின்றன.