சாங்கி சிறைச்சாலை வளாகத்தில் அண்மையில் தெரியவந்த தொற்றுக் குழுமத்தினால் பாதிக்கப்படாத பகுதிகளைச் சேர்ந்த மற்ற கைதிகளுக்கும் ஊழியர்களுக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும் என்று சிங்கப்பூர் சிறைச்சாலை சேவைத் துறை தெரிவித்துள்ளது.
வளாகத்தின் ஒரு பகுதியில் உள்ள சமையல் அறையில் வேலை பார்த்தவர்களில் எட்டு பேருக்குத் தொற்று இருந்தது அண்மையில் தெரியவந்தது.
அவர்களைத் தவிர வேறு யாரும் பாதிக்கப்படவில்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதர பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது. வளாகத்தில் ஏ, பி என்று இரண்டு பகுதிகள் இருக்கின்றன.
அவற்றில் ஏ பகுதியைச் சேர்ந்த 5,000 பேருக்கும் அதிகமான கைதிகள், ஊழியர்கள், ஒப்பந்தக்காரர்களுக்கு குறைந்தது ஒரு முறை சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றாலும் வரும் நாட்களில் இரண்டாவது முறையாக பரிசோதனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளாகத்தில் ஒரு சமையல் அறையில் வேலை பார்த்த 39 வயது ஆடவருக்குத் தொற்று ஏற்பட்டது. அவருடன் அணுக்க தொடர்பில் இருந்த ஐந்து கைதிகளுக்கும் அந்த ஆடவரின் குடும்ப உறுப்பினர்கள் இரண்டு பேருக்கும் கொரோனா தொற்று இருந்து பிறகு தெரியவந்தது.

