தொடர்பில்லா தொற்று கூடுகிறது; கவலை அதிகரிக்கிறது
சிங்கப்பூரில் தொடர்பு இல்லாத கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் இந்த மாதம் சீராக அதிகரித்து வந்துள்ளன.
சமூகத்தில் இன்னமும் கண்டறியப்படாத நிலையில் மேலும் பலருக்கும் தொற்று இருக்கக்கூடுமோ என்ற கவலை இதனால் கூடிவருகிறது. இந்த மாதம் 7ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை, கிருமி தொற்றிய நோயாளியுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் உள்ளூரில் 75 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
இந்த எண்ணிக்கை, தொற்று கூடியதற்கு முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் மொத்தம் 68 ஆக இருந்தது. இத்தகைய தொடர்பு இல்லாத தொற்றுகளின் அன்றாட சராசரி எண்ணிக்கை, இந்த ஆண்டு தொடக்கத்தில் இறங்குமுகமாக இருந்தது. ஆனால் சென்ற மாதம் இது கூடியது. பிறகு இந்த மாதத்தில் அதிகமாகிவிட்டது.
சமூகத்தில் தொடர்பு இல்லா தொற்றுகள் அதிகமாகி வருவதை அடுத்து சிங்கப்பூரில் மற்றொரு முடக்கம் நடப்புக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக சிலர் கருதுகிறார் கள். இப்படி தொடர்பு இல்லாமல் ஏற்படக்கூடிய தொற்று பற்றி கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு இணைத் தலைவர் லாரன்ஸ் வோங் மே 18ஆம் தேதி குறிப்பிட்டு இருந்தார்.
கொவிட்-19 தொற்று காரணமாக 70 வயது சிங்கப்பூரர் மரணம்
டான் டோக் செங் மருத்துவமனை கிருமித்தொற்று குழுமத்துடன் தொடர்புடைய 70 வயது சிங்கப்பூரர் மரணமடைந்தார். மரணத்திற்கு கொவிட்-19 தொடர்பான பிரச்சினைகள் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் இவரையும் சேர்ந்து கொரோனாவுக்கு மொத்தம் 32 பேர் பலியாகிவிட்டனர்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அந்த ஆடவர், ஏப்ரல் 22ல் டான் டோக் செங் மருத்துவமனை 9டி வார்டில் சேர்க்கப்பட்டார். அவருக்குத் தொற்று இருந்தது ஏப்ரல் 30ஆம் தேதி உறுதியானது.
அவர் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று சுகாதார அமைச்சு தெரி வித்தது. மரணமடைந்தவரின் குடும்பத்திற்குத் தேசிய தொற்றுநோய் நிலையம் உதவி வருகிறது.
இது, டான் டோக் செங் மருத்துவமனை கிருமித் தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடைய இரண்டாவது மரணம். மே 1ஆம் தேதி 88வது மாது ஒருவர் மரண மடைந்துவிட்டார். இந்த மருத்துவமனை தொற்றுக் குழு மத்தில் மொத்தம் 46 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சாங்கி சிறைச்சாலை வளாகத்தை சேர்ந்தோருக்குப் பரிசோதனை
சாங்கி சிறைச்சாலை வளாகத்தில் அண்மையில் தெரியவந்த தொற்றுக் குழுமத்தினால் பாதிக்கப்படாத பகுதிகளைச் சேர்ந்த மற்ற கைதிகளுக்கும் ஊழியர்களுக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும் என்று சிங்கப்பூர் சிறைச்சாலை சேவைத் துறை தெரிவித்துள்ளது.
வளாகத்தின் ஒரு பகுதியில் உள்ள சமையல் அறையில் வேலை பார்த்தவர்களில் எட்டு பேருக்குத் தொற்று இருந்தது அண்மையில் தெரியவந்தது. அவர்களைத் தவிர வேறு யாரும் பாதிக்கப்படவில்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதர பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது.
வளாகத்தில் ஏ, பி என்று இரண்டு பகுதிகள் இருக்கின்றன. அவற்றில் ஏ பகுதியைச் சேர்ந்த 5,000 பேருக்கும் அதிகமான கைதிகள், ஊழியர்கள், ஒப்பந்தக்காரர்களுக்கு குறைந்தது ஒரு முறை சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றாலும் வரும் நாட்களில் இரண்டாவது முறையாக பரிசோதனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளாகத்தில் ஒரு சமையல் அறையில் வேலை பார்த்த 39 வயது ஆடவருக்குத் தொற்று ஏற்பட்டது. அவருடன் அணுக்க தொடர்பில் இருந்த ஐந்து கைதிகளுக்கும் அந்த ஆடவரின் குடும்ப உறுப்பினர்கள் இரண்டு பேருக்கும் கொரோனா தொற்று இருந்து பிறகு தெரியவந்தது.
25 கல்வி நிலையங்களைச் சேர்ந்த 37 மாணவர்கள் பாதிப்பு
சிங்கப்பூரில் கடந்த நான்கு வாரங்களில் 25 கல்வி நிலையங்களைச் சேர்ந்த மொத்தம் 37 மாணவர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவர்களில் 15 பேர் லேனிங் பாயிண்ட் டியூஷன் சென்டர் என்ற கல்வி நிலையத்தைச் சேர்ந்தவர்கள்.
சாங்கி விமான நிலைய முனையம் 3ஐ சேர்ந்த தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர்கள் 11 பேர்.
பாலர் பள்ளிகள் முதல் தொடக்க, உயர்நிலைப் பள்ளிகள், மதரசா, தொடக்கக் கல்லூரி, பல உயர் கல்வி நிலையங்கள் எல்லாம் அந்த 25 கல்வி நிலையங்களில் அடங்கும். லேனிங் பாயிண்ட் கல்வி நிலையத்தின் பார்க்வே சென்டர் கிளையில் ஆசிரியையாக வேலை பார்க்கும் 50 வயது மாதுக்கு மே 12ஆம் தேதி தொற்று உறுதியானதை அடுத்து லேனிங் பாயிண்ட் தொற்று குழுமம் தெரியவந்தது.
அதேபோல் ராம்கி கிளீன்டெக் சர்வீசஸ் என்ற துப்புரவு நிறுவனத்தைச் சேர்ந்த 88 வயது துப்புரவாளருக்கு மே 5 ஆம் தேதி தொற்று உறுதியானதை அடுத்து சாங்கி விமான நிலைய தொற்றுக் குழுமம் கண்டுபிடிக்கப்பட்டது.

