லோரோங் சுவான் - கால்டிகாட் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட சமிக்ஞை கோளாற்றால் வட்ட ரயில் பாதையில் நேற்றுக் காலை உச்ச நேரத்தின்போது சேவை தாமதத்தைப் பயணிகள் எதிர்கொள்ள நேர்ந்தது.
தாமதம் குறித்து காலை 6.36 மணிக்கு ஃபேஸ்புக் வழியாகப் பதிவிட்ட எஸ்எம்ஆர்டி நிறுவனம், "பழுதைச் சரிசெய்ய எங்கள் பொறியாளர்கள் ஈடுட்டு வருகின்றனர். ரயில்கள் மிகக் குறைவான வேகத்தில் இயங்கி வருகின்றன," என்று தெரிவித்தது.
ரயில் சேவை தாமதம் ஒரு மணி நேரம் நீடித்தது.
பின்னர் 7.30 மணியளவில், "ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கிவிட்டன. இலவச இணைப்புப் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டு விட்டன. காலை நேரப் பயணத்தின்போது ஏற்பட்ட பாதிப்பிற்காக வருந்துகிறோம்," என்று தனது டுவிட்டர் பக்கத்தில் எஸ்எம்ஆர்டி பதிவிட்டது.
சேவை தாமதத்தின்போது, சிராங்கூன் - ஃபேரர் ரோடு நிலையங்களுக்கு இடையிலான பயணத்திற்குக் கூடுதல் நேரம் ஆகலாம் என்று ரயில்களிலும் பாதிக்கப்பட்ட நிலையங்களிலும் எஸ்எம்ஆர்டி அறிவித்தபடி இருந்தது.
பாய லேபார்-போன விஸ்தா நிலையங்களுக்கு இடையே இலவச இணைப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.
இருப்பினும், இணைப்புப் பேருந்து சேவைகளைக் காண முடியவில்லை என்று பாதிக்கப்பட்ட பயணிகளில் சிலர் சமூக ஊடகம் வழியாகத் தங்களது மனக்குறையினை வெளிப்படுத்தினர்.