செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
c8af8534-8c5a-4f53-8a25-5701367678ed
-

நாணயப் பரிமாற்றம்: சிங்கப்பூர், ஜப்பான் உடன்பாடு புதுப்பிப்பு

தேவை ஏற்படும்போது, அமெரிக்க டாலருக்கு மாற்றாக தங்களது நாணயங்களை மாற்றிக்கொள்ள அனுமதிக்கும் உடன்பாட்டை சிங்கப்பூரும் ஜப்பானும் நேற்று புதுப்பித்துக் கொண்டன. அந்த இருதரப்புப் பரிமாற்ற உடன்பாட்டின்படி, மூன்று பில்லியன் அமெரிக்க டாலர் (S$4 பி.) வரையிலான அல்லது அதற்கு நிகரான மதிப்புக்கு ஈடான சிங்கப்பூர் வெள்ளியைக் கொடுத்து, ஜப்பானிடம் இருந்து ஜப்பானிய யென்னை சிங்கப்பூர் பெற்றுக்கொள்ள முடியும். ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வரைக்கும் ஜப்பானிய யென்னைக் கொடுத்து, சிங்கப்பூரிடம் இருந்து சிங்கப்பூர் வெள்ளியை ஜப்பான் பெற்றுக்கொள்ள முடியும்.

தடுப்பூசி மையங்களில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள்

சமூகத்தில் கொவிட்-19 பரவல் அதிகரித்துள்ளதையடுத்து, தடுப்பூசி மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகப் படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி போடப் பெயரைப் பதிவுசெய்து கொள்ளும் ஒருவரிடம், அண்மையில் அவர் சாங்கி விமான நிலையத்திற்குச் சென்று வந்தாரா எனக் கேட்கப்படுகிறது. கெபுன் பாரு சமூக மன்றத்தில் அமைந்துள்ள தடுப்பூசி மையப் பணியாளர்கள் தங்களது முகக்கவசங்களுக்கு மேல் முகமூடி அணிந்திருந்ததாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தி கூறியது. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே தடுப்பூசி போட்டுக்கொள்ள வருவோர்க்காக காத்திருப்புப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இயூ டீ, செஞ்சா - கேஷ்யூ சமூக மன்றங்களில் செயல்படும் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தோர்க்கு இலவச முகக்கவசம் வழங்கப்பட்டது.

ஆர்க்டிக்கில் நீடித்த வளர்ச்சி, பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஆதரவு

நீடித்து நிலைக்கும் வளர்ச்சி தொடர்பிலும் கடலில் குப்பை போடுதல், பசுமை சார்ந்த கப்பல் போக்குவரத்து போன்ற சுற்றுச்சூழல் சார்ந்த விவகாரங்களிலும் ஆர்க்டிக் பகுதியுடன் தொடர்ந்து இனைந்து செயல்பட சிங்கப்பூர் தயாராகவுள்ளது என்று வெளியுறவு, தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் நடந்த 12வது ஆர்க்டிக் மன்ற அமைச்சர்நிலை கூட்டத்தின்போது அவர் இவ்வாறு சொன்னார். ஆர்க்டிக் பகுதிவாழ் இன மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதிலும் அவ்வட்டாரத்திலுள்ள தாவர, விலங்கினங்களைப் பாதுகாப்பதிலும் மன்றத்தின் இளையர் ஈடுபாட்டு முயற்சிகளை அதிகப்படுத்தும் வழிகளை ஆராய்வதிலும் பங்காற்ற சிங்கப்பூர் கடப்பாடு கொண்டுள்ளது என்று திருவாட்டி சிம் ஆன் சொன்னார். பருவநிலை மாற்றத்திற்கு அளவுகோலாக ஆர்க்டிக் விளங்கி வருகிறது என்று வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.