புதிய கொவிட்-19 விதிமுறைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடப்புக்கு வந்தது முதல் பணிப்பெண்கள் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் அதிகாரிகள் சோதனையை அதிகப்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட மனிதவள அமைச்சு, பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளை மீறும் பணிப்பெண்கள் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது.
தற்போது எழுந்திருக்கும் கொவிட்-19 சூழ்நிலை காரணமாக ஓய்வு நாட்களில் பணிப்பெண்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அமைச்சு வலியுறுத்தி உள்ளது.
இருப்பினும் அவ்வாறு ஓய்வு நாட்களில் வீட்டில் தங்கி இருக்கும்போது அவர்களுக்கு வேலை எதுவும் தரக்கூடாது என்றும் அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
"வீட்டிலேயே ஓய்வைக் கழிப்பது தொடர்பாக முதலாளிகள், பணிப்பெண்கள் இடையில் இருதரப்பு ஒப்பந்தம் செய்துகொள்ள முன்வர வேண்டும். ஓய்வு நாளில் வேலை செய்தால் அதற்கான இழப்பீட்டை முதலாளிகள் தரவேண்டும்," என்று அது தெரிவித்து உள்ளது.
ஒருவேளை அத்தியாவசியக் காரணங்களுக்காக பணிப்பெண்கள் வெளியில் செல்ல நேர்ந்தால் அந்தப் பயணத்தை சுருக்கமாக முடித்துக்கொள்ளவும் கூட்டமான பகுதிகளை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
"குழுக்களுடன் அவர்கள் ஒன்று கலக்கவோ சாப்பாடு, பானங்கள் அல்லது பாத்திரங்கள் போன்றவற்றை பகிர்ந்துகொள்ளவோ கூடாது," என்பது அமைச்சின் வலியுறுத்து.
அண்மைய சமூகத் தொற்றுகளுக்கு எதிரான போராட்டத்தில் நாடு ஈடுபட்டு இருக்கும் வேளையில் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்படுவதும் நிகழ்ந்து வருகிறது. சமூகத்தொற்றுகளில் அவர்களும் அவ்வப்போது இடம்பெறுகின்றனர்.
உதாரணமாக, நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்ட 27 சமூகத் தொற்றுகளில் 32 வயது பிலிப்பீன்ஸ் பணிப்பெண் ஒருவரும் அடங்குவார்.
அதற்கு முந்திய நாளான புதன்கிழமை சுகாதார அமைச்சு வெளியிட்ட பட்டியலில் இரு பணிப்பெண்களும் இடம்பெற்று இருந்தனர். செவ்வாய்க்கிழமையும் ஒரு பணிப்பெண்ணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
சமூக இடைவெளியைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தைப் பணிப்பெண்கள் புரிந்துகொள்ள அவர்களுக்கு அவர் களின் முதலாளிகள் உதவ வேண்டும் என்றும் அமைச்சு கூறியுள்ளது.
'அத்தியாவசிய காரணங்களுக்காக வெளியில் சென்றால் விரைந்து திரும்பிவிட வேண்டும்'

