இரண்டு மெக்டோனல்ட்ஸ் உணவகங்கள் மூடப்பட்டன

2 mins read
20b75bc6-5088-43a0-9eb5-ccc47903699f
ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்று இல்லை என்பது தெரியவரும் வரை இரண்டு மெக்டோனல்ட்ஸ் உணவகங்களும் மூடப்பட்டு இருக்கும். படம்: கூகல் -

தொற்று: பாசிர் ரிஸ் சமூக மன்றம், பிடோக் ரெசர்வோர் உணவகங்கள் செயல்படமாட்டா

பாசிர் ரிஸ் இலியாஸ் சமூக மன்றம், பிடோக் ரெசர்வோர் ஆகிய இடங்களில் செயல்படும் மெக்டோனல்ட்ஸ் உணவகங்கள் கொவிட்-19 தொற்று காரணமாக மூடப்பட்டு இருக்கின்றன.

அவற்றில் பணிசெய்யும் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனைகள் மூலம் தெரியவரும் வரை அந்த இரண்டு உணவகங்களும் மூடப்பட்டு இருக்கும்.

பாசிர் ரிஸ் இலியாஸ் சமூக மன்றம் அந்தப் பகுதிக்கான தடுப்பூசி நிலையமாகவும் செயல்படுகிறது. அந்தச் சமூக மன்றத்தில் செயல்படும் உணவகத்தைச் சேர்ந்த உணவு விநியோக ஊழியர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது மே 20ஆம் தேதி தெரிந்தது.

கிருமி தொற்றிய ஊழியருடன் தொடர்புடைய வேறு ஒருவருக்கு தொற்று இருப்பது தெரியவந்ததை அடுத்து பிடோக் ரெசர்வோர் உணவகமும் மூடப்பட்டது.

இதனிடையே, பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த அமைச்சருமான டியோ சீ ஹியன், இலியாஸ் சமூக மன்றம் முற்றிலும் சுத்தப்படுத்தப்பட்டு இருக்கிறது என்றும் அது அன்றாடம் சுத்தப்படுத்தப்படும் என்றும் ஃபேஸ்புக்கில் கூறினார்.

கிருமி தொற்றிய ஊழியர் தடுப்பூசி நிலையத்திற்கு வரவில்லை என்பதால் அந்த நிலையம் தொடர்ந்து மக்களுக்கு உதவுவதாக அவர் கூறினார்.

இவ்வேளையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட உணவகத்தைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களும் கொவிட்-19 பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அவர்களிடம் கூறப்பட்டு இருப்பதாகவும் மெக்டோனல்ட்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

பிடோக் ரெசர்வோர் மற்றும் பாசிர் ரிஸ் இலியாஸ் சமூக மன்றம் ஆகியவற்றில் செயல்படும் தங்கள் உணவகங்கள் மே 20 மாலையில் உடனடியாக கால வரம்பு இன்றி மூடப்பட்டு முற்றிலும் துப்புரவுப் பணிகள் நடந்ததாக அந்த நிறுவனம் மேலும் கூறியது.

கிருமி தொற்றிய இருவரும் மெக்டோனல்ட்ஸ் நிறுவனத்தின் உணவு விநியோக ஒப்பந்த நிறுவனங்களில் ஒன்றான ஐ-விக் லாஜிஸ்டிக் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள். அவர்கள் மே 17ஆம் தேதி கடைசியாக வேலை பார்த்தார்கள்.

தடமறிதல் தொடர்பில் மெக்டோனல்ட்ஸ் நிறுவனம் சுகாதார அமைச்சுடன் சேர்ந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.