37 திட்டங்களுக்கு $3.7 மில்லியன் உதவி

37 திட்டங்களுக்கு $3.7 மில்லியன் உதவி

2 mins read
7dcd72d7-9093-4670-879a-287bea89ec8e
சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சியுடன் இயற்கை வளங்களையும் கட்டிக்காப்பதற்கு வகை செய்யும் சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030க்கு எஸ்ஜி சுற்றுச்சூழல் நிதி ஆதரவு அளிக்கிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பசுமை வளத்தைப் பெருக்கி பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க உதவும் இயற்கை வள பாதுகாப்பு முயற்சிகளுக்கு உதவியாக, மொத்தம் 37 பசுமைத் திட்டங்களுக்கு $3.7 மில்லியன் நிதி உதவி வழங்கப்படும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ அறிவித்தார்.

அந்த நிதி உதவி, எஸ்ஜி சுற்றுச்சூழல் நிதியின்கீழ் இடம்பெறும். அவற்றில் 25 திட்டங்களுக்கு $50,000 வரை உதவி கிடைக்கும். இதர 12 திட்டங்கள் $50,000க்கும் $700,000க்கும் இடைப்பட்ட தொகையைப் பெறும்.

சரியான வழிகளில் பொருட்களை மறுசுழற்சிக்கு உட்படுத்துவது எப்படி என்பதைச் சமூகத்துக்குக் கற்றுத்தர ஒரு பௌத்த அறநிறுவனம் தொடங்கி இருக்கும் சுயஉதவி மறுசுழற்சி மண்டலம், 'இன்ஜினியரிங் குட்' என்ற லாப நோக்கற்ற அமைப்பு நடத்தும் மடிக்கணினி பழுது நீக்கம் மற்றும் மறுசுழற்சி பட்டறை ஆகியவை உதவி பெறும் திட்டங்களில் அடங்கும்.

இதனிடையே, இந்நிதி உதவியைப் பெற அரசாங்க, தனியார் துறைகளுடன் பொதுமக்களும் விண்ணப்பித்து இருந்ததாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு அறிக்கை தெரிவித்தது.

எஸ்ஜி சுற்றுச்சூழல் நிதி $50 மில்லியன் தொகையுடன் சென்ற ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது. நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று முதன் முதலாக அறிவிப்பு விடுக்கப்பட்டது.

அதற்கான காலக்கெடு கடந்த ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. 200க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்தச் சுற்றுச்சூழல் நிதி, சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030க்கு ஆதரவளிக்கிறது.

இந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சியுடன் இயற்கை வளங்களையும் கட்டிக்காத்து பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க உதவும் பாதையை வகுத்துத் தருகிறது.

ஒட்டுமொத்த உலக முயற்சி தேவை

இதனிடையே, 'குளோபல் காம்பேக்ட் நெட்வொர்க் சிங்கப்பூர்' என்ற லாப நோக்கற்ற அமைப்பு நடத்திய வாருடாந்திர இளையர் கருத்தரங்கில் நேற்று தொடக்க உரையாற்றிய அமைச்சர், பருவநிலை மாற்றத்தைச் சமாளித்து வெற்றிகொள்ள கடப்பாடுடன் கூடிய ஒட்டுமொத்த உலக முயற்சி தேவை என்றார்.

தென் கிழக்கு ஆசியாவைப் பொறுத்தவரை, இந்த வட்டாரம் கொவிட்-19 தொற்றில் இருந்து மீண்டுவரும் வேளையில், சுற்றுச்சூழல் இலக்குகளை நிறைவேற்ற நாடுகள் ஒன்றாகச் சேர்ந்து செயல்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

அதேவேளையில், தனிப்பட்டவர்கள் என்ற முறையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த செயல்களில் ஈடுபடும்படி இளையர்களை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

தேசிய, அனைத்துலக முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்னதாக சமுதாயத்தில் சமூக நியதிகளை நிலைநாட்ட இளையர்கள் பாடுபடலாம் என்றும் அவர் கூறினார்.

வட்டார முயற்சிகளுக்குப் பல வழிகளிலும் சிங்கப்பூர் உதவி வருவதாக அந்த மெய்நிகர் நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில் திருவாட்டி ஃபூ தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் இலக்குகளை நிறைவேற்றுவதில் ஆசியான் இளையர்கள் எப்படி பங்காற்றலாம் என்பது பற்றி குறிப்பிட்ட திருவாட்டி ஃபூ, எந்த ஒரு முயற்சியும் சிறியதல்ல என்றும் ஒட்டுமொத்த மாக அவை பெரும் பலன் தரும் என்றும் கூறினார்.