சிங்கப்பூரில் பல்வேறு மோசடிகள் தொடர்பில் 275 பேர் விசாரிக்கப்பட்டு வருவதாக போலிசார் தெரிவித்துள்ளனர். அந்த மோசடிகளில் ஏறத்தாழ $7.9 மில்லியன் பணத்தை அப்பாவிகள் இழந்துவிட்டதாக போலிஸ் குறிப்பிட்டுள்ளது.
சந்தேகப்பேர்வழிகளில் 159 பேர் ஆண்கள், 116 பேர் பெண்கள். அவர்களுக்கு வயது 14 முதல் 81 வரை என்று தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் தில்லுமுல்லு, பணம் தொடர்பான மோசடிக் காரியங்களில் ஈடுபட்டு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதன் தொடர்பில் அவர்கள் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
வர்த்தக விவகாரப் பிரிவு மற்றும் ஏழு போலிஸ் தரைப் பிரிவு அதிகாரிகள் மே 8க்கும் மே 21ஆம் தேதிக்கும் இடையில் எடுத்த இரண்டு வார கால நடவடிக்கையில் அவர்கள் சிக்கினர்.
அந்தச் சந்தேகப்பேர்வழிகளுக்குத் தனித்தனியான 519 விவகாரங்களில் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
சிங்கப்பூர் அரசாங்க அதிகாரிகள் போல் நடித்தது, சீன அதிகாரிகள் போல் நடித்தது, முதலீடு, வேலைகள், பாலியல் சேவைகள், கடன்கள், போலியான சூதாட்ட இணையத் தளங்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு மோசடிகளில் அவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.

