தொடர்பில்லாத எட்டுப் பேர் உட்பட சமூகத்தில் 22 பேருக்குத் தொற்று
சமூக அளவில் 22 பேர் உட்பட நேற்று புதிதாக 29 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சமூகத்தில் கொரோனா தொற்றியோரில் எட்டுப் பேருக்கு முன்னர் கிருமி தொற்றிய எவருடனும் தொடர்பில்லை. எஞ்சிய 14 பேர் முன்னர் கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புடையவர்கள். அவர்களில் 12 பேர் ஏற்கெனவே தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுவிட்டனர்.
இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த எழுவருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் இங்கு வந்ததும் கட்டாய இல்லத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் அறிக்கை கூறியது. அவர்களில் மூவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்.
வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் புதிதாக எவரையும் கொரோனா தொற்றவில்லை. இதையடுத்து, சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 61,799ஆக உயர்ந்துவிட்டது.
பள்ளியில் முதல் பாதிப்பு பதிவு
இதனிடையே, சிங்கப்பூரில் பள்ளியில் கொரோனா பரவிய முதல் சம்பவம் பதிவாகி இருக்கிறது.
நேற்று முன்தினம் சமூக அளவில் பதிவான கொரோனா பாதிப்புகளில் ஆங்கிலோ- சீனப் பள்ளி (ஜூனியர்) மாணவரும் ஒருவர்.
அந்த 11 வயதுப் பையன், கடந்த புதனன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்த இன்னொரு மாணவரின் வகுப்புத் தோழன் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.
சக மாணவருக்குக் கிருமித்தொற்று உறுதியானதை அடுத்து, மறுநாள் வியாழக்கிழமை அந்த 11 வயது மாணவர் தனிமைப்படுத்தப்பட்டார். அதே நாளில் காய்ச்சலாலும் இருமலாலும் அவர் பாதிக்கப்பட்டார். இந்த அறிகுறிகளை அடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மறுநாள் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவு, அவரை கொரோனா தொற்றியிருப்பதை உறுதிப்படுத்தியது. அவருக்கான 'சிராலஜி' சோதனை முடிவு இன்னும் வெளியாகவில்லை.
இதையடுத்து, "ஏசிஎஸ் ஜூனியர் பள்ளியில் பதிவான கொரோனா பாதிப்புகள், நம் பள்ளிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதை நம் அனைவருக்கும் நம் பங்காளிகளுக்கும், குறிப்பாக பெற்றோர்களுக்கு மீண்டும் தெளிவாக நினைவூட்டுவதாக அமைந்துள்ளன," என்று கல்வி அமைச்சு நேற்று ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

