கொவிட்-19 தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட சிங்கப்பூரர்களுக்கு உதவ பொதுமக்களிடம் இருந்து $1.1 மில்லியன் நன்கொடை திரட்டப்பட்டது. அதன்மூலம் 767 குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் வேலை போனதாலும் அல்லது ஊதியம் குறைக்கப்பட்டதாலும் வசதி குறைந்த பல குடும்பங்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் கடந்த ஆண்டு ஒரு செய்தி வெளியிட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து, நூற்றுக்கு மேற்பட்ட வாசகர்கள் அந்த நாளிதழைத் தொடர்புகொண்டு, அந்தக் குடும்பங்களுக்குப் பணமாகவும் பொருளாகவும் நன்கொடை அளிக்க விரும்புவதாகத் தெரிவித்தனர்.
அதையடுத்து, அவற்றைத் திரட்டி வசதி குறைந்த குடும்பங்களுக்கு விநியோகிப்பதற்காக, சமூக சேவை அமைப்புகளும் அடித்தள சமூகக் குழுக்களும் இணைந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 'மைண்ட் தி கேப்' எனும் அமைப்பை உருவாக்கின.
'மைண்ட் தி கேப் நிதி' மூலம் பயன்பெற்றவர்களுக்கு, மாதத்திற்கு $100 முதல் $500 வரை ஆறு மாதங்களுக்கு வழங்கப்பட்டதாக அந்த அமைப்பின் பேச்சாளர் தெரிவித்தார்.
அவசரகால உதவிக்காகவும் அந்தக் குடும்பங்கள் விண்ணப்பிக்க முடியும். அவ்வேளைகளில், அவற்றுக்கு $100 முதல் $500 வரை ஒருமுறை மட்டும் வழங்கப்படும்.

