மக்களிடையே எழும் கேள்விகளுக்கு சுகாதார அமைச்சர் ஓங் பதில்
கொவிட்-19 நோயாளிகளில் 78 பேருக்கு ஏற்கெனவே தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. இவர்களில் பலர் முன்களப் பணியாளர்கள். சுமார் 300 கொவிட்-19 நோயாளிகளுக்கு இன்னமும் தடுப்பூசி போடப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அண்மைய கிருமிப் பரவல் நிலவரம் குறித்து நேற்று தெரிவித்தார்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட கிட்டத்தட்ட 21 விழுக்காட்டினரும் போடாத சுமார் 79 விழுக்காட்டினரும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டது இத்தகவலின் அடிப்படையில் தெரிய வருகிறது. தொற்றுகள், கடும்நோய்கள் ஆகியவற்றைத் தடுக்கும் செயல்திறன் தடுப்பூசிகளுக்கு அதிகமுண்டு என்று அனைத்துலக ஆய்வுகள் குறிப்பிட்டிருப்பதையும் அவர் சுட்டினார்.
சிங்கப்பூரில் கொவிட்-19 நிலவரம் குறித்து மக்கள் பொதுவாக எழுப்பி வரும் கேள்விகளைத் தொகுத்துத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அமைச்சர் ஓங் பதில்களுடன் பதிவிட்டிருந்தார். தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்பும் தொற்று ஏற்பட்டதால், தடுப்பூசியால் ஏது பயன் என்று சிலர் கேட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் இத்தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டார்.
புதிய 'பி1617' குறித்து...
இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட 'பி1617' உருமாறிய கொரோனா கிருமி குறித்தும் கேள்வி கேட்டப்பட்டது.
காற்றில் பரவக்கூடியது என்றும் தொற்று ஆற்றல் அதிகம் உள்ளது என்றும் 'பி1617' உருமாறிய கிருமியைப் பற்றி கூறப்படும் தகவல் உண்மையா என்று கேட்கப்பட்டது.
பொதுவாக கொவிட்-19 போலவே இக்குறிப்பிட்ட உருமாறிய கிருமியின் தன்மையும் உள்ளது என்று கூறிய திரு ஓங், ஒருவரின் இறுமல், தும்மல், பேச்சு வழி காற்றில் பரவும் அதே ஆற்றல் உள்ளது என்றார்.
நெருக்கமான இடங்களில் முகக்கவசமின்றி நடந்த சந்திப்புகளின்போது பெரும்பாலான தொற்றுச் சம்பவங்கள் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. இதனால், உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிடுவதற்கும் பெருமளவில் ஒன்றுகூடுவதற்கும் அரசாங்கம் தடைவிதித்தது.
"இதனால்தான், தற்போதைய கிருமித்தொற்று சம்பவங்களில் அதிகமானவை வீட்டில் பரவியவையாக உள்ளன. அதனால் உடல்நலமில்லை என்றால் குடும்ப உறுப்பினர்களைப் பாதுகாக்க, உடனே மருத்துவரைச் சென்று பாருங்கள்," என்று அறிவுறுத்தினார் அமைச்சர் ஓங்.
சிங்கப்பூரின் கொவிட்-19 நிலவரம் மோசமடைந்து வருவதாகக் கூறுவது உண்மையல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். மே 16 முதல் பதிவாகி வரும் கிருமித்தொற்று சம்பவங்களை ஆராயும்போது, சமூகத் தொற்றுச் சம்பவங்கள் மற்றும் தொடர்பு கண்டறியப்படாத சமூகத் தொற்றுச் சம்பவங்களின் மூன்று நாள் சராசரி எண்ணிக்கை கிட்டத்தட்ட அதே நிலையில் உள்ளதாக அவர் பகிர்ந்துகொண்டார்.
தீவிர பரிசோதனைகள் குறித்து...
குறிப்பிட்ட சில வீவக கட்டடங்களில் வசிப்போருக்கு கொவிட்-19 பரிசோதனை செய்யப்படுவதால் நிலைமை மோசம் என்று சொல்லிவிட முடியாது என்றார் அவர்.
"கிருமிப் பரவல் ஏற்படுவதைத் தடுக்கும் பயனுள்ள ஒரு வழி, பரிசோதனை செய்வது. இத்தகைய பரிசோதனை நடவடிக்கைகள் நடப்பதால் தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் அல்லது இல்லாதவர்களை உடனே கண்டறிந்து விரைந்து தனிமைப்படுத்த முடிகிறது," என்றார் திரு ஓங்.

