கொவிட்-19 கொள்ளைநோய் ஏற்படுத்தியுள்ள நிச்சயமற்ற நிலையில் பலரும் மத்திய சேமநிதித் திட்டங்கள் அளிக்கும் பலன்களைப் பயன்படுத்திக்கொள்ள சென்ற ஆண்டு முன்வந்தனர்.
குறிப்பாக, தங்களின் மத்திய சேமநிதி ஓய்வுக்கால சேமிப்புக் கணக்கு அல்லது குடும்ப உறுப்பினரின் ஓய்வுக்கால சேமிப்புக் கணக்கில் தொகையை நிரப்பிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் சென்ற ஆண்டு 40% அதிகமாக இருந்தது.
ஓய்வுக்கால தொகை நிரப்பும் திட்டத்தின் கீழ் சென்ற ஆண்டு கிட்டத்தட்ட 141,130 மத்திய சேமநிதி உறுப்பினர்கள் வழங்கியிருந்த மொத்த தொகை மதிப்பு $2.97 பில்லியனாகும்.
2019ஆம் ஆண்டில் 103,800 உறுப்பினர்கள் மட்டுமே இத்திட்டம் மூலம் தங்களின் நிதிகளை அதிகப்படுத்தினர்.
வீடமைப்பு தொடர்பில் தொகையைத் திருப்பித் தரும் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 2019ஐ ஒப்பிடுகையில் சென்ற ஆண்டு மும்மடங்கானது.
கிட்டத்தட்ட 14,980 உறுப்பினர்கள் இத்திட்டத்தைச் சென்ற ஆண்டு பயன்படுத்திக்கொண்டனர். அவர்கள் மூலம் பெறப்பட்ட தொகை $1.48 பில்லியன். அதற்கு முந்தைய ஆண்டில் 5,500 உறுப்பினர்கள் மட்டுமே இத்திட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டனர்.
திட்டத்தைப் பயன்படுத்திச் சேமிப்பை அதிகப்படுத்துவதன் பலனை மேலும் அதிகமானவர்கள் உணரத் தொடங்கியுள்ளதால் சென்ற ஆண்டு பலர் தங்களின் பணத்தை மத்திய சேமநிதிக் கணக்கில் செலுத்தினர் என்று கூறப்படுகிறது.
உறுப்பினர்கள் ஓய்வுக்கால பணம் நிரப்பும் திட்டத்தின் கீழ் ரொக்கமாகவோ தற்போதைய மத்திய சேமநிதி சேமிப்புகளையோ பயன்படுத்திக்கொள்ளலாம்.
தங்களின் சொந்த மத்திய சேமநிதிக் கணக்குகளில் தொகை நிரப்புவோருக்கு $7,000 வரை வரிக் கழிவுகள் கிடைக்கும். தங்களின் பெற்றோர், சகோதரர், கணவர் போன்ற குடும்ப உறுப்பினர்களின் கணக்குகளில் தொகை நிரப்பினால் மேலும் $7,000 வரிக் கழிவுக்குத் தகுதிபெறுவர்.

