சிங்கப்பூரில் வேலை தேடுவோரின் அடையாள அட்டை விவரங்கள் தவறாக பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முறையான நடைமுறைகள் நடப்பில் இருப்பதாக ஊழியர் சேர்ப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
வேலை தேடுவோரின் தேசிய அடையாள அட்டையை எப்போதாவது மட்டுமே தாங்கள் மின்னிலக்க நகல் எடுப்பதாகவும் ஊழியரை வேலையில் சேர்த்துக்கொள்ளும் நிறுவனம் கேட்கும்போது மட்டும் தாங்கள் அப்படிச் செய்வதாகவும் சில ஊழியர் சேர்ப்பு நிறுவனங்கள் கூறின. தனிப்பட்ட தகவல் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வரும் நிபந்தனைகளைத் தாங்கள் கவனத்தில் கொண்டு செயல்படுவதாக ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் தெரிவித்தன.
இந்தச் சட்டத்தின்கீழ் அடையாள அட்டை விவரங்களைப் பெற, பயன்படுத்த, வெளியிட அல்லது நகல் எடுக்க நிறுவனங்களுக்குப் பொதுவாக அனுமதி இல்லை.
இருந்தாலும் சட்டப்படி தேவைப்பட்டால் அல்லது இந்தச் சட்டம் அனுமதிக்கும் பட்சத்தில் நிறுவனங்கள் அவ்வாறு செய்யலாம்.
ஊழியர் சேர்ப்பு நிறுவனத்தில் வேலை பார்த்த எமிர்சன் கோ ஷு இன், 32, என்பவர், வேலையில் இருந்தபோது 384 பேரின் விவரங்களைப் பெற்று, வேலையை விட்டுப் போன பிறகும் அவற்றைத் தன் கைபேசியில் பதிந்து வைத்திருந்து, பிறகு அவற்றைப் பயன்படுத்தி 207 முகக்கவசங்களைப் பல இயந்திரங்களில் இருந்து பெற்றுக்கொண்டார். நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு ஏழு மாதம் ஆறு வாரச் சிறைத்தண்டனையும் $3,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

