மக்கள் செயல் கட்சியின் மாதர் பிரிவும் இளையர் பிரிவும் வரும் மாதங்களில் அரசாங்கத்திடம் கூட்டறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்யும். மாதர்கள் மேம்பாட்டை மென்மேலும் சாதிப்பதற்கான யோசனைகள் அந்த அறிக்கையில் இடம்பெற்று இருக்கும்.
கொவிட்-19க்கு பிந்தைய மின்னிலக்கமய உலகத்தில் மாதர்கள் பல துறைகளிலும் செழித்தோங்க உதவும் பரிந்துரைகளை அந்த அறிக்கை குறிப்பிடும் என்று மாதர் பிரிவுத் தலைவர் ஜோசஃபின் டியோவும் இளையர் பிரிவுத் தலைவர் ஜனில் புதுச்சேரியும் நேற்று ஃபேஸ்புக் பக்கத்தில் கூறினர்.
அந்த அறிக்கை இதர மூன்று அம்சங்களிலும் கவனம் செலுத்தும் என்று திருவாட்டி ஜோசஃபின் தெரிவித்தார். வீட்டிலும் வேலையிடத்திலும் சமூகத்திலும் மாதர்களுக்கு மேலும் பல வாய்ப்புகளை வழங்குவது எப்படி என்பது முதல் அம்சம் என்றார் அவர்.
சிறார்களையும் முதியவர்களையும் பராமரித்து அவர்களது தேவைகளை நிறைவேற்றும் பொறுப்புகளை ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் மேலும் சரிசமமாக எப்படி பகிர்ந்துகொள்ளலாம் என்பதை இரண்டாவது அம்சம் விவரிக்கும்.
சமூகம் முழுவதையும் திரட்டி மாதர்களின் மேம்பாட்டை மேன்மேலும் முன்னெடுத்துச் செல்வது மூன்றாவது அம்சம் என்று திருவாட்டி ஜோசஃபின் குறிப்பிட்டார்.
மாதர் சாசனம் தன்னுடைய 60வது ஆண்டுவிழாவை இன்று காண்கிறது.
அந்தச் சாசனம் 1961ல் செய்தது போலவே இப்போது சிங்கப்பூரில் மாதர்கள் மேலும் மேம்படுவதற்கான புதிய அடிப்படைகளை கூட்டறிக்கை நிர்மாணிக்கும் என்று தாங்கள் நம்புவதாக திருவாட்டி ஜோசஃபினும் டாக்டர் ஜனிலும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் பேசிய ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரஹாயு மக்சாம், இந்த ஆண்டு தொடக்கத்தில் அனைத்து தரப்பினர்களையும் சேர்ந்த பொதுமக்களுடன் நடத்தப்பட்ட விவாதிப்புகள், ஆய்வுகளின் மூலம் பரிந்துரைகள் உருப்பெற்று இருப்பதாகக் குறிப்பிட்டார்.
அந்த அறிக்கை இன்னும் ஓரிரு மாதங்களில் அரசாங்கத்திடம் தாக்கல் செய்யப்படும் என்றும் திருவாட்டி ரஹாயு தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் தாக்கலாகவிருக்கும் மாதர் பிரச்சினைகள் பற்றிய வெள்ளை அறிக்கையை உருவாக்கத்தில் இந்தக் கூட்டறிக்கை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

