புதிதாக 36 பேர் பாதிப்பு; சமூகத்தில் 24 பேருக்குத் தொற்று

புதிதாக 36 பேர் பாதிப்பு; சமூகத்தில் 24 பேருக்குத் தொற்று

2 mins read
d85e2d5d-0ceb-4498-9ae8-b43ca1eb7704
பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 61,860 ஆக இருக்கிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 36 பேருக்கு தொற்று ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.

அவர்களில் 24 பேர் சமூகத்தொற்றுக்கு ஆளானவர்கள். இவர்களில் 22 பேர் முன்பு கிருமி தொற்றிய நோயாளிகளுடன் தொடர்புடையவர்கள். 12 பேர் ஏற்கெனவே தடுத்து வைக்கப்பட்டு இருந்தவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் இன்று புதிதாக யாருக்கும் தொற்று இல்லை.

வெளிநாடுகளில் இருந்து வந்த 12 பேருக்கும் தொற்று உறுதியானதால் அவர்களுக்குத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இங்கு வந்தவர்களில் ஐந்து பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்.

இதனிடையே, ஜூரோங் ஈஸ்ட்டில் இருக்கும் ஜெம் மற்றும் வெஸ்ட்கேட் ஆகிய இரண்டு கடைத்தொகுதிகளும் புதிய சமூகத்தொற்றுக் குழும மையம் என்று ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

அவை தொடர்பிலான நான்கு பேருக்கு கிருமித்தொற்று இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இது பற்றி ஞாயிற்றுக்கிழமை அமைச்சு தெரிவித்திருந்தது.

சமூகத்தில் புதிதாக தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை இரண்டு வாரங்களுக்கு முன் 131 ஆக இருந்தது. அது சென்ற வாரம் 182 ஆக அதிகரித்தது என்பது கடந்த சனிக்கிழமை நிலவரப்படி தெரியவந்தது.

தொடர்பு இல்லாத தொற்றுக்கு ஆளானவர்களின் வாராந்திர எண்ணிக்கையும் கூடி இருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன் 30 ஆக இருந்த இந்த எண்ணிக்கை கடந்த வாரம் 46 ஆக உயர்ந்தது.

ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 17 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களையும் சேர்த்து மொத்தம் 61,279 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 61,860 ஆக இருக்கிறது.

இப்போது 242 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அவர்களில் மூவர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். சமூக நல்வாழ்வு நிலையங்களில் 256 பேர் குணமடைந்து வருகிறார்கள். கொவிட்-19 காரணமாக மொத்தம் 32 பேர் மாண்டுள்ளனர்.