கொவிட்-19 நிலவரம் காரணமாக நாளை மறுநாள் விசாக தினக் கொண்டாட்டங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.
அவை இணையத்தில் இடம்பெற இருக்கின்றன.
கொவிட்-19 தொற்றுக்கு முன்பு விசாக தினத்தன்று பெளத்தர்கள் பலரும் ஆலயத்திற்குச் செல்வார்கள். பகல் நேர வழிபாடுகளில் கலந்து கொள்வார்கள். சென்ற ஆண்டு விசாக தினத்தன்று சிங்கப்பூரில் முடக்கம் நடப்பில் இருந்தது.
பாதுகாப்பு இடைவெளி கட்டுப்பாடுகள் போன்றவை இந்த ஆண்டிலும் நடப்பில் இருப்பதால் பக்தர்களுக்காக வழிபாட்டு நிகழ்ச்சிகளை நாளை மறுநாள் நேரடியாக இணையத்தில் ஒளிபரப்ப சிங்கப்பூர் பௌத்த கூட்டமைப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இதனிடையே, கலாசார, சமூக இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் ஞாயிற்றுக்கிழமை கேலாங்கில் இருக்கும் அந்தக் கூட்டமைப்புக் கட்டடத்திற்குச் சென்றார். இப்போதைய சூழ்நிலையை அந்தக் கூட்டமைப்பினரிடம் எடுத்துச் சொல்லி விளக்கி புரிந்துணர்வுக்காகவும் தலைமைத்துவ பணிக்காகவும் அவர்களுக்குத் தான் நன்றி தெரிவித்ததாக ஃபேஸ்புக்கில் அமைச்சர் கூறினார்.
வழக்கமாக விசாக தினத்தன்று ஆயிரக்கணக்கான பௌத்தர்கள் ஆலயங்களுக்குச் சென்று பல்வேறு வழிபாடுகளிலும் ஈடுபடுவார்கள்.
என்றாலும் அந்தக் கொண்டாட்டங்களை இந்த ஆண்டிலும் குறைத்துக்கொண்டு இணையத்தில் அவற்றை இடம்பெறச் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

