சிங்கப்பூரிலிருந்து 87,055 இந்திய நாட்டவர்கள் நாடு திரும்பினர்

சிங்கப்பூரிலிருந்து 87,055 இந்திய நாட்டவர்கள் நாடு திரும்பினர்

1 mins read
aaef22fc-4d7b-4933-820b-fe5aace26880
கொவிட்-19 கிருமிப் பரவல் காரணமாக உலக நாடுகளில் சிக்கியுள்ள இந்திய நாட்டவர்களை மீட்பதற்காக இந்திய அரசாங்கம் 'வந்தே பாரத்' என்ற பெயரில் சிறப்பு விமானச் சேவைகளை நடத்தி வருகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இந்திய அரசாங்கம், இந்திய குடிமக்களை மீட்பதற்காக ஏற்பாடு செய்துள்ள சிறப்பு 'வந்தே பாரத்' விமானம் மூலம் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை 87,055 பேர் சிங்கப்பூரிலிருந்து சொந்த நாடு திரும்பியுள்ளனர்.

இந்திய தூதகரம் இந்த விவரத்தை வெளியிட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய நாட்டவர்கள் நாடு திரும்புவதற்கு வேலையின்மை ஒரு காரணம். குடும்ப நிர்ப்பந்தம், கொவிட்-19 காரணமாக குடும்ப உறுப்பினர்கள் மரணமடைந்தது போன்ற காரணங்களுக்காவும் பலர் நாடு திரும்பியுள்ளனர்.

"கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து வந்தே பாரத் விமானங்கள் 18,629 பயணிகளை திரும்ப அழைத்து வந்துள்ளது," என்று சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் அறிக்கை வாயிலாக தெரிவித்தாக ஊடகங்கள் கூறின.

இதற்கிடையே சிங்கப்பூரின் மூன்று அமைச்சுகள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் நாள்தோறும் சரசரியாக 180 பேர் சிங்கப்பூரிலிருந்து இந்தியா திரும்புவதாக தெரிவிக்கப்பட்டது.

"வந்தே பாரத் விமானச்சேவை மூலம் நாள்தோறும் 180 பேர் சிங்கப்பூரிலிருந்து புறப்படுவதாகவும் ஒவ்வொரு நாளும் 25 பேர் சிங்கப்பூர் வருவதாகவும் போக்குவரத்து, வெளியுறவு, மனிதவள அமைச்சுகளின் கூட்டு அறிக்கை தெரிவித்தது.

சிங்கப்பூர் வருபவர்களில் பெரும்பாலோர் சிங்கப்பூர் குடிமக்கள் அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் ஆவர்.

கொவிட்-19 கிருமிப் பரவல் காரணமாக உலக நாடுகளில் சிக்கியுள்ள இந்திய நாட்டவர்களை மீட்பதற்காக இந்திய அரசாங்கம் 'வந்தே பாரத்' என்ற பெயரில் சிறப்பு விமானச் சேவைகளை நடத்தி வருகிறது.

இந்த விமானச் சேவைகளுக்கு சிங்கப்பூர் அரசாங்கமும் அனுமதி வழங்கியுள்ளது.