சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களில் அதிக மாணவர்கள் சேர்க்கப்படும்

சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களில் அதிக மாணவர்கள் சேர்க்கப்படும்

2 mins read
75db088e-0841-4dec-a0c7-2f56bd9826fc
கொவிட்-19 தொற்று காரணமாக வெளிநாட்டில் பயிலும் வாய்ப்பு பாதிக்கப்பட்டிருப்பதால் கூடுதல் மாணவர்களை சேர்க்க பல்கலைக் கழங்கள் அனுமதிக்கப்படுகின்றன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இவ்வாண்டு சிங்கப்பூரின் தன்னாட்சி பல்கலைக்கழகங்களில் அதிக மாணவர்கள் சேர்க்கப்படவிருக்கின்றனர்.

கொவிட்-19 தொற்று காரணமாக வெளிநாட்டில் பயிலும் வாய்ப்பு பாதிக்கப்பட்டிருப்பதால் கூடுதல் மாணவர்களை சேர்க்க பல்கலைக் கழங்கள் அனுமதிக்கப்படுகின்றன என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.

அவர் இன்று வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் அதிக மாணவர்களை சேர்ப்பதற்காக உள்ளூர் பல்கலைக்கழகங்கள் நீக்குப்போக்குடன் நடந்து கொள்ளும் என்று திரு சான் குறிப்பிட்டார்.

இருந்தாலும் மாணவர் சேர்க்கைக்கான தரத்தை தன்னாட்சி பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து கட்டிக்காக்கப்படும் என்றும் உயர்தரக் கல்வி உறுதி செய்யப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டு ஆறு தன்னாட்சி பல்கலைக் கழகங்களில் பல்வேறு படிப்புகளில் கூடுதலாக 2,000 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.

இவ்வாண்டு ஜனவரியில் தன்னாட்சி பல்கலைக்கழகங்களில் கூடுதலாக ஆயிரம் மாணவர்கள் சேர்க்க அனுமதி வழங்கப்படும் என்று முன்னாள் கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறியிருந்தார்.

இவற்றில் சில இடங்கள் வெளிநாட்டில் கல்வி பயில திட்டமிட்டிருந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. பலவீனமான வேலைச் சந்தையில் நுழைவதற்குப் பதிலாக தொடர்ந்து படிக்க விரும்பிய சில மாணவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர்.

இவ்வேளையில் கொவிட்-19 தொற்றுச் சூழலை கல்வி அமைச்சு தொடர்ந்து கண்காணிக்கும் என்ற திரு சான், மாணவர்களுக்கு ஆதரவு வழங்க தன்னாட்சி பல்கலைக்கழகங்களுடன் அணுக்கமாகச் செயல்படும் என்றார்.

கொள்ளைநோய் பரவல், மேற்கு நாடுகளில் ஆசியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு போன்றவை காரணமாக புகழ்ெபற்ற பாரம்பரியமான உயர்கல்வி நிலையங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

குறிப்பாக பிரிட்டிஷ் பல்கலைக்கழங்களில் சேரும் சிங்கப்பூர் மாணவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது.

கடந்த 2019ல் பிரிட்டிஷ் விசாவுக்கு 2,535 சிங்கப்பூர் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் கடந்த ஆண்டு 1,421 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர் என்று பிரிட்டிஷ் அரசாங்க இளையத்தளத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலியாவுக்கான விண்ணப்பங்களும் 2019ல் 1,315லிருந்து கடந்த ஆண்டு ஐம்பது விழுக்காடு அதாவது 530க்குக் குறைந்துள்ளது.